தலையங்கம்

தாய்மைக்கு ஓர் அங்கீகாரம்!

செய்திப்பிரிவு

18 வயதை எட்டாத சிறுவர் அல்லது சிறுமிக்கு இயல்பான பாதுகாவலராகத் தந்தையும் அவருக்குப் பிறகு தாயும் இருக்க முடியும் என்று ‘இந்து சிறார் மற்றும் பாதுகாவலர்கள் சட்டம்’தெரிவிக்கிறது. தந்தைவழி சமூக மரபை இச்சட்டம் தாங்கிப் பிடிப்பதாக நீண்ட கால விமர்சனங்கள் உண்டு. கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவன் விலகிப்போன ஒரு பெண் தன் குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும் அல்லது வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணோ, தத்தெடுத்த தாயோ தன் குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும்? அவர்களுக்கெல்லாம் இந்தச் சட்டம் தரும் ஆதரவு / பாதுகாப்பு என்ன? நெடுநாள் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுவந்தன. உச்ச நீதிமன்றம் தன்னுடைய சமீபத்திய தீர்ப்பில், “திருமணமாகாத தாயும்கூட, தனது குழந்தைக்குப் பாதுகாவலராக இருக்க உரிமை கோரலாம்” என்று கூறி, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது; ஆணாதிக்க மரபின் அடித்தளத்திலிருந்து ஒரு செங்கல்லை உருவியிருக்கிறது.

படித்த, வேலைக்குப் போகும் ஒரு இளம் தாய், தன்னுடைய முதலீட் டுக்குத் தனது ஐந்து வயது மகனை வாரிசாக நியமிக்க மனுச் செய்தார். ஆனால், அது தொடர்பான நடைமுறையோ, அந்தக் குழந்தை யின் தந்தை பெயரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் அல்லது பாதுகாவ லர் என்ற உரிமை தனக்கு இருக்கிறது என்பதற்கான சான்றிதழை அந்தத் தாய் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து, நீதிமன்றத்தை அவர் நாடினார். “பாதுகாவலர்கள், அவர்களுடைய பொறுப்பில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் - 1890, பிரிவு 11-ன் கீழ், குழந்தையின் தந்தை, அவருடைய வசிப்பிடம் ஆகியவற் றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்” என்று கீழமை நீதிமன்றம் அவரிடம் கூறியது. அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.

உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்ரம்ஜீத் சென் தலைமையிலான அமர்வு, “மகனின் எதிர்காலத்துக்குத் தாய் பொறுப்பேற்றிருக்கிறார். தந்தையோ தனக்கு மகன் இருக்கிறான் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார். இத்தகைய சூழலில், முதலில் குழந்தையின் நலன்தான் முக்கியமானது. அடுத்ததாக, தந்தையின் பெயரை வெளியிடாமல் இருக்க தாய் விரும்பினால், அவருடைய அந்த உரிமையை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வரவேற்க வேண்டிய, மிக முக்கியமான தீர்ப்பு இது. குடும்பம் என்கிற அமைப்புக்கு வெளியிலும் அந்த அமைப்பு சிதையும்போதும் முதல் பலிகடாக்கள் குழந்தைகள்தான். ஆக, அடிப்படையில் முக்கிய மானது குழந்தையின் நலனும் அவர்களைப் பாதுகாத்து வளர்ப்ப வருக்குமான அங்கீகாரமும்தான். 1999-ல் எழுத்தாளர் கீதா ஹரிஹரன் உச்ச நீதிமன்றத்திடம் இதே போன்ற காரணத்துக்காக வழக்காடினார். தன்னுடைய மகன் பெயரில் சில முதலீடுகளைச் செய்ய விரும்பினார். தந்தையின் பெயர்தான் வேண்டும் என்று வங்கி வலியுறுத்தியதால் நீதிமன்றத்தை நாடினார். குழந்தையின் தந்தை, தாய் இருவரையுமே சமமான பாதுகாவலராகக் கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அப்போது அறிவித்தது. “தந்தைக்குப் ‘பிறகு’ என்று சட்டத்தில் உள்ள வார்த்தையைக் கொண்டு, பாதுகாவலராக இருக்கும் முதல் உரிமை தந்தைக்குத்தான், தாய்க்கு இரண்டாம் பட்சம்தான் என்று பொருள் கொண்டுவிடக் கூடாது” என்றும் அப்போதே தீர்ப்பளித்தது. எனினும், நம்முடைய அமைப்பின், அலுவலகங்களின் காதுகளில் அது விழவில்லை. இனி விழும் என்று நம்பலாம்.

SCROLL FOR NEXT