உலகச் சந்தையில் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை சரிந்திருக்கிறது. மார்ச் 2009-க்குப் பிறகு, தங்கம் விலை இப்போதுதான் இப்படிக் குறைந்திருக்கிறது. தங்கம் விலை மேலும் குறையும் என்று கூறப்பட்டாலும் உடனே சிறிதளவு உயர்ந்தும் இருக்கிறது. தங்க நகைகள் வாங்குவது என்பது இந்தியாவைப் பொறுத்த அளவில் முதலீட்டோடும் சேமிப்போடும் சேர்ந்தது. ஆகையால், இப்போது தங்கம் வாங்குவது நல்லதா அல்லது விலை மேலும் குறையுமா என்ற கேள்வி பெரும்பான்மையோரிடம் எழுந்திருப்பதன் நியாயத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.
தங்கம் விலை சரிவுக்கான காரணம் ஒன்றும் தங்கமலை ரகசியம் அல்ல. அமெரிக்க ஃபெடரல் வங்கி, முதலீடுகள் மீதான வட்டியை உயர்த்தப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் முக்கியக் காரணம். கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் அமெரிக்காவில் வட்டிவீதம் உயரப்போகிறது என்பது உலகச் சந்தையைப் பொறுத்தவரை பெரிய நிகழ்வு. அமெரி்க்க டாலரின் செலாவணி மாற்று மதிப்பு வலுவாக இருப்பது குறித்துத்தான் இப்போது சந்தையில் அதிகம் பேசுகின்றனர். தங்களை அறியாமல், அமெரிக்க ஃபெடரல் வங்கி சார்பில் வட்டிவீத உயர்வு குறித்த எதிர்பார்ப்பை ஒரு குறிப்பாக வெளியிட்டதால், டாலரின் மதிப்பு உயர்வது நிச்சயம் என்ற முடிவுக்கு முதலீட்டாளர்கள் வந்துவிட்டனர். தங்கத்தின் விலை சரிவதைப் போன்றே சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலையும் குறைகிறது. எண்ணெய்க்கு அதிகக் கேட்பு இல்லை. எண்ணெய் விற்பனை அளவும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கிரேக்க நாட்டுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் விலகிவிட்டது. சிக்கன நடவடிக்கைகளை ஏற்று தன்னுடைய நிதித் தேவைக்கு மேலும் கடன் வாங்க கிரேக்கம் ஒப்புக்கொண்டுவிட்டது. சீனச் சந்தை சரிந்துவருகிறது. ஈரானும் தன்னுடைய அணு நிலையங்களைச் சர்வதேச ஆய்வுக்குத் திறந்துவிட ஒப்புக்கொண்டுள்ளது. ஓரளவுக்கு சர்வதேச அரங்கில் பதற்றம் குறைந்துள்ளது. ஆகையால், இப்போதைக்கு சர்வதேசச் சந்தையில் அனைவருமே தங்கத்தில் முதலீடுசெய்ய யோசிக்கின்றனர். அதேசமயம், இது எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்றும் சொல்ல முடியவில்லை.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை சரிவதால் இந்தியப் பொருளாதாரம் என்னாகும்? இந்தியா ஆண்டுதோறும் 800 டன்கள் முதல் 900 டன்கள் வரை தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியா வின் பெரும்பான்மை தங்கத் தேவை இறக்குமதி மூலமே பூர்த்தியாகிறது. தங்கமும் கச்சா பெட்ரோலிய எண்ணெயும்தான் இந்தியாவின் வெளிவர்த்தகப் பற்றுவரவில் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணங்கள். தங்கத்தின் விலை குறைவதால் இந்தப் பற்றாக்குறையும் சிறிதளவு குறையக்கூடும். சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் வர்த்தகம் முழுக்க அமெரிக்க டாலர் மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தங்கம் விலை குறைந்தாலும் டாலரின் செலாவணி மாற்று மதிப்பு உயர்ந்தால் வெளிவர்த்தகப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துவிடாது.
இப்படிப்பட்ட சூழலில், அரசு தனக்குப் பிடித்தமான தங்க முதலீட்டுத் திட்டத்தை எளிமையாகவும் விரைவாகவும் அமல்படுத்தினால் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்கலாம். அதற்கு இது உற்ற தருணம். தேவைப்படும்போது தங்க முதலீட்டுப் பத்திரத்தைக் கொடுத்து பணமாகவோ, தங்கமாகவோ பெற்றுக்கொள்வதை எளிதாக்கிவிட வேண்டும். இதனால் அந்நியச் செலாவணியும் மிச்சப்படும்; உள்நாட்டு தங்கக் கையிருப்பும் குறையாது.