தலையங்கம்

பாஜகவின் ஊழல்களுக்கான பதிலா காங்கிரஸின் ஊழல்கள்?

செய்திப்பிரிவு

எதிர்பார்த்தபடியே பெரும் புயலோடு தொடங்கியிருக்கிறது நடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர். ஒரு வருஷத்துக்கு முன் ஊழலுக்கு எதிரான பெரும் பிரகடனத்துடன் ஆட்சிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு. அரசுக்கு எதிரான ஊழல் புகார் எதுவும் எழாததைத் தன்னுடைய முதலாண்டு சாதனைகளில் முக்கியமானதாகவும் அது முன்னிறுத்தியது. அடுத்த ஒரு மாதத்திலேயே ஏகப்பட்ட முறைகேடு, ஊழல் புகார்கள் பாஜக அரசைச் சூழ்ந்தன. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் நடந்த ‘வியாபம்’ மாபெரும் ஊழல். மத்திய அரசைத் தாண்டி, பாஜகவின் சுக்கானையும் தன் கையில் வைத்திருக்கும் பிரதமர் மோடி இதற்குப் பொறுப் பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் / பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் எதிர்பார்ப்பதும் கோருவதும் யதார்த்தமானது. நாடாளு மன்றத்துக்கு வெளியே இதுவரை அப்படியான பதில் கிடைக்காத சூழலில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கும்போது எதிர்க் கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்டத்தானே செய்வார்கள்? கடந்த காலங்களில் பாஜகவும் அதைத்தானே செய்தது? காமன்வெல்த் போட்டிகள் ஊழல், அலைக் கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகள் அம்பலமான காலகட்டத்தில், நாடாளுமன்றம் எப்படி அமளிதுமளிப்பட்டது என்பதையெல்லாம் யாரேனும் மறந்திருப்பார்களா என்ன? அரசைப் போலவே நாடாளுமன்றமும் அமைதியாக நடக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, முறைகேடு புகார்களை மவுனமாகக் கடந்துவிட்டு, ஏனைய விவாதங்கள் நடப்பதை யாரும் விரும்பவில்லை.

பாஜக அரசு செல்லும் திசை சரியானதாகத் தெரியவில்லை. பாஜக மீதான ஊழல் / முறைகேடு புகார்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்வி களுக்கு, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விவாதிக்கக் கோரி பாஜக உறுப்பினர்களும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்போம்” என்று சொல்லியிருக்கிறார் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு. இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியோ, “மருமகன் (சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில பேரம்) முதல் குவாத்ரோச்சி (போபர்ஸ் ஊழல்) விவகாரம் வரையில் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. கேரளத்தில் நடந்த மாட்டுத்தீவன ஊழல், கோவாவின் நீர் விநியோகத் திட்ட ஊழல், உத்தராகண்ட் வெள்ள நிவாரண ஊழல், இமாச்சலப் பிரதேசத்தின் உருக்கு ஊழல் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் நாடாளு மன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என்று சொல்லியிருக்கிறார். முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுஷ்மா ஸ்வராஜோ இன்னும் ஒரு படி மேலே போய், “மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்ட சந்தோஷ் பக்ரோடியாவுக்குத் தூதரக அலுவல் பாஸ்போர்ட் வழங்குமாறு என்னை நிர்ப்பந்தித்தார். தேவைப்பட்டால், அந்த மூத்த தலைவர் யார் என்பதை நான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். இவையெல்லாம் என்ன விதமான பதில்கள்?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்கள் மக்களுக்குத் தெரியாதது அல்ல. அந்த ஊழல்கள் ஏற்படுத்திய அதிருப்தியும் வெறுப்பும் தானே நரேந்திர மோடியை இன்றைக்குப் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் நடப்பதாகத் தெரிந்தால், அதை மத்திய அரசு விசாரிக்கட்டும்; குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தட்டும். மக்கள் அதை வரவேற்பார்கள். ஆனால், ‘நீ என்னைப் பார்த்துக் கேள்வி எழுப்பினால், நான் உன்னைக் கேள்விக்குள்ளாக்குவேன்’ என்பது சரியான அணுகுமுறை அல்ல. இப்படியான அணுகுமுறை, அரசியல் காய் நகர்த்தல்களுக்கு உதவலாம். ஆனால், நம்பகத்தன்மை பறிபோய்க்கொண்டிருக்கிறது என்பதை பாஜக உணர வேண்டும்!

SCROLL FOR NEXT