வேளாண் வட்டியை 7% அளவாகவே நீட்டிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நல்ல முடிவு. இந்தக் கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால், மேலும் 3% மானியம் தரப்படும். இதனால் விவசாயத்துக்கான வட்டிவீதம் 4% என்கிற அளவிலேயே தொடரும். ரூ. 3 லட்ச ரூபாய் வரையில் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு இந்த வட்டி வீதம் பொருந்தும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2006-07-ல் கொண்டு வந்ததில் தொடங்கி 1.5% முதல் 3% வரை மாறுபாடுகளுடன் இந்த வேளாண் வட்டி மானியம் தொடர்கிறது. கடந்த சில மாதங்களாகவே விவசாயக் கடன்களுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பாக, அரசு பரிசீலித்துவருவதாக வெளியான செய்திகள், விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்திவந்தன. நிலம் கையகப்படுத்தல் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு எதிரான அரசு என்ற விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், இப்போது விவசாயக் கடன்களுக்கான வட்டியை உயர்த்தியிருந்தால் அரசு மேலும் அவப்பெயருக்கு ஆளாகியிருக்கும். இதை உணர்ந்திருப்பதை அரசின் இப்போதைய முடிவு உணர்த்துகிறது. மேலும், இப்போதைய பருவமழை வழக்கமான அளவைவிட 7% குறைவாகவே இருக்கும் என்ற இந்திய வானிலைத் துறையின் அறிக்கைகள் எச்சரிக்கும் சூழலில், வட்டியைக் குறைத்துக் கடன் வழங்கும் முடிவு, வேளாண்மையின் சரிவுக்குக் கொஞ்சம் அணை போடும்.
அரசின் முடிவு வெளியான கையோடு, விவசாயத்துக்காகத் தரப்படும் இந்தக் கடன் தொகை வெவ்வேறு செயல்களுக்காகத் திருப்பிவிடப்படுவதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று ‘பொருளாதாரச் சீர்திருத்தவாதிகள்’ வழக்கம்போலப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்தக் கோரிக்கை நியாய மானதாகத் தோன்றும். ஆனால், யாரை இந்தக் குரல்கள் குறிவைக்கின்றன என்பது நாம் கவனிக்க வேண்டியது. அதாவது, விவசாயக் கடன்கள் என்ற பெயரில் அதற்கான ஒதுக்கீட்டை மடை மாற்றிவிடும் வங்கியாளர்கள், அதன் மூலம் அனுகூலம் பெறும் பணக்காரர்களையா அல்லது விவசாயிகளையா?
உதாரணமாக, விவசாயக் கடன்களில் ஒரு பிரிவான நகைக் கடன்களை வைத்துக்கொள்வோம். நகைக் கடன்கள் விவசாயி களுக்கு அப்பாற்பட்டு வெளியே போகிறது என்றால், அதற்கு மூலகாரணம் யார்? வங்கியாளர்கள். ஒரு விவசாயி வங்கியை விவசாயக் கடனுக்காக அணுகிக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்களும் துயரங்களும் நாம் அறியாதவை அல்ல. வங்கிக் கடன்கள் பெறுவதிலேயே கடைசி வரிசை விவசாயிகளுக்கானது என்பதும் யாரும் மறுக்கக் கூடியதல்ல. வங்கிகள் விவசாயிகளின் நண்பர்களாக இருந்தால், லேவாதேவிக்காரர்களைப் பெரும்பாலான விவசாயிகள் நாடிச் செல்ல என்ன தேவை இருக்கிறது? ஆக, எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சொற்பக் கடன்களும் மானியங்களும் சீர்திருத்தவாதிகளை வருத்தி வதைக்கின்றன என்பதே உண்மை.
இன்றைக்கெல்லாம் விவசாயத்தின் மூலம் யாரும் பெரிய லாபம் பார்த்துவிட முடியாது. மகசூல் அதிகம் இருந்தாலும் விவசாயிகளுக்கு மிஞ்சுவது என்னவோ சொற்பம்தான். அப்படியும் ஏன் விவசாயத்தைத் தொடர்கின்றனர் என்றால், வேறு வழியில்லை என்ற காரணத்தால்தான். எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்லும் எவ்வளவோ விஷயங்களை அரசாங்கம் கர்ம சிரத்தையோடு நிறைவேற்றி யிருக்கிறது. விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் கொடுக்கச் சொன்ன அவருடைய பரிந்துரைகள் இன்னமும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை, ஏன்? ‘சீர்திருத்தவாதிகள்’ இதுபற்றி எல்லாம் யோசிக்க வேண்டும்!