தலையங்கம்

நட்பின் அலைகள்!

செய்திப்பிரிவு

ஒரு நீண்ட உறவில் நெருக்கமான அத்தியாயம் அரங்கேறி யிருக்கிறது. பிரதமர் மோடியின் வங்கதேசப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகியிருக்கிறது.

இந்தியா, வங்கதேசம் இரண்டுக்குமே அவற்றைக் காலனியாக ஆண்டவர்கள் விட்டுச்சென்ற பிரச்சினைகள் அனேகம். விடுதலைக்குப் பின் இரு நாடுகளுமே பெரும்பான்மை மக்களின் இனத்தை அடியொற்றி ஆட்சி அமைப்பதைத் தவிர்த்தவை. எத்தனை அரசியல் சூறாவளிகள் வந்தாலும் இந்தியாவில் நிலவும் அரசியல் நிலைத்தன்மையும், ஜனநாயக நடைமுறைகளும், வளர்ச்சியில் அதற்குள்ள ஈடுபாடும் வங்கதேசத்தைக் கவர்ந்திழுப்பவை. இந்தியாவைப் போலவே தங்கள் நாடும் ஜனநாயகப் பாதையில் வளர்ச்சியை நோக்கி நடைபோட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வங்கதேச அரசியல்வாதிகளிடம் உண்டு. தங்களுடைய விடுதலைக்கு அளப்பரிய உதவிகளை அளித்த தேசம் என்ற வகையில், தங்களுடைய கனவுக்கும் இந்தியாவிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் அதிகம். அதேசமயம், பெரியண்ணன் மனோபாவத்துடன் அல்லாமல், ஒரு மூத்த நண்பனாக இந்த உதவிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று வங்கதேசச் சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை நோக்கி இந்தியா எடுத்து வைத்திருக்கும் மகத்தான அடி என்று மோடியின் பயணத்தைச் சொல்லலாம்.

இந்தியா - வங்கதேச உறவின் நெருக்கமானது உள்ளபடி வங்கதேச நலன்களை மட்டுமே அறுவடையாகக் கொடுப்பதல்ல. இந்தியாவின் கிழக்கு எல்லையில் நிரந்தர அமைதிக்கான உத்தரவாதத்தைத் தரக் கூடியது அது. புவியரசியலிலும் பாதுகாப்பிலும் இந்தியாவுக்குப் பல மடங்கு பலத்தைத் தரக்கூடியது அது.

இதையெல்லாம் உணர்ந்துதான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். முக்கியமாக, இந்தியாவும் வங்கதேசமும் நிலப்பகுதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை உருவாக்கினார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், மோடி அரசும் அந்த ஒப்பந்தத்தில் ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் அப்படியே ஏற்றது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது முதல் இரு நாடுகளின் எல்லைகளிலும் நாடற்றவர்களாக வசித்துவந்த ஆயிரக் கணக்கானோரின் வாழ்நாள் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக் கிறது இந்த ஒப்பந்தம். கல்வி, சுகாதாரம், சாலை வசதி, மின்சார இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளைப் பெறுவதில்கூடச் சிக்கல்களை அனுபவித்துவந்தவர்களை தேசிய நீரோட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்தியாவின் இரு பெரும் கட்சிகளும் எல்லா அரசியல் மாச்சரியங்களையும் தாண்டி தங்கள் நாட்டுடனான உறவில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் அதில் காட்டும் ஆர்வமும் வங்கதேசத்தை இந்தியாவுடன் மேலும் நெருக்கமாக்கியது. வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் கட்சிக்கு முக்கிய போட்டிக் கட்சிகளான ஜமாத்-இ-இஸ்லமி, வங்கதேச தேசியவாதக் கட்சி போன்றவையும்கூட மோடியின் வருகையையும் இரு நாடுகளுக்கு இடையிலான உடன்பாடுகளையும் மனதார வரவேற்றிருக்கின்றன.

டாக்காவின் வீதிகளில் பட்டாசுச் சத்தம், இனிப்புகள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியின் பின்னணியில் பறக்கும் இரு நாட்டு தேசியக் கொடிகளின் உறவின் நெருக்கம் என்றும் தொடர வேண்டும். இருதரப்பு கலாச்சார, பொருளாதார உறவுகள் மேலும் மேம்பட வேண்டும்.

SCROLL FOR NEXT