நரேந்திர மோடி அரசுக்குப் பிரச்சாரத்தில் உள்ள அதீத பிரியத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனாலும், எல்லோருமே அரசின் பிரச்சாரகர்களாக மாற வேண்டும் என்ற அரசின் நினைப்பு ஜீரணிக்க முடியாதது.
சர்வதேச யோகா தினத்துக்கு ஊடகங்கள் விசேஷ கவனம் அளிக்க வேண்டும் என்று அரசு விரும்பியது. அரசின் விருப்பத்துக் கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லா ஊடகங்களுமே இயல்பான அக்கறை யுடனும் ஆர்வத்துடனும் இதற்கு விசேஷ கவனம் அளித்தன. யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட செய்திகளுடன், டெல்லி ராஜபாதையில் 35,000 பேருடன் பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட மான நிகழ்ச்சிகுறித்த செய்திகளும் பெரிய அளவில் இடம்பெற்றன. ஆனால், மாநிலங்களவைச் செய்தித் தொலைக்காட்சியான ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சியில் யோகா நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார் பாஜக செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். கூடவே, அந்தத் தொலைக்காட்சியின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி, யோகா நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் ட்விட்டரில் கேட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது என்பது உடனடியாகத் தெரியவந்தது. சர்வதேச யோகா தினம் தொடர்பான இரு நேரலை நிகழ்ச்சிகள், ஒரு குறும்படம், ஒரு சிறப்புச் செய்தி ஆகியவை ஒளிபரப்பப்பட்டன என்று ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குர்தீப் சப்பால் விளக்கம் அளித்தார். கூடவே, யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ராம் மாதவ் மட்டுமல்லாமல் மத்திய அரசும் வருத்தம் தெரிவிக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனாலும், ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சி மீதான பாஜகவின் குறி விலகவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத் தொலைக்காட்சிக்காக ரூ. 1,700 கோடி செலவிடப்பட்டதாகக் கூறி, அதன் அடிப்படையிலான விவாதங்களும் எதிர்மறைச் செய்திகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
காலங்காலமாக அகில இந்திய வானொலி நிலையமும் தூர்தர்ஷனும் யாருடைய ஊதுகுழலாக இருக்கின்றன என்பது மக்கள் அறியாதது அல்ல. நேற்றைக்குத் தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் அபாரமான சாதனைகளை நிகழ்த்திவரும் சூழலில், அகில இந்திய வானொலியும் தூர்தர்ஷனும் ஏன் மோசமான நிலையில் இருக்கின்றன என்பதற்கான காரணமும் மக்கள் அறியாதது அல்ல. மத்தியில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் தம் ஊதுகுழலாக மட்டுமே அவை இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றன. விளைவாக, உடல் முழுக்கச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பந்தயக் களத்தில் கால்கள் புதைக்கப்பட்ட சூழலில் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன. எதிர்க் கட்சிகளாக இருக்கும்போது அவற்றின் தன்னாட்சி, சுதந்திரச் செயல்பாடுபற்றிப் பேசுபவர்களின் உண்மை முகம், ஆளும் நாற்காலிக்கு வந்தவுடன் எப்படியாகிவிடுகிறது என்பதைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். அதன் அப்பட்டமான வெளிப்பாடுகளில் ஒன்றாகவே ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சி மீதான பாஜகவின் குறியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை, விவாதங்களை, வரலாற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதைப் பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் ஒரு செய்தி நிறுவனம், யோகா தினக் கொண்டாட்டத்தை ஏன் ஒளிபரப்பவில்லை என்று கேட்பதே அபத்தம். ஆனால், அவர்கள் ஒளிபரப்பியிருக்கிறார்கள். அதன் பின்னரும் குறிவைத்து அது தாக்கப்படுகிறது என்றால், ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது?