நம்முடைய சமகால ஆட்சியாளர்கள் ‘வளர்ச்சி’ மீது காட்டும் காதலையும் அதற்காக அவர்கள் செல்லத் தயாராக இருக்கும் எல்லைகளையும் பார்க்கும்போது இதெல்லாம் எங்கே சென்று முடியுமோ என்ற கவலை ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
மோடி பிரதமரான பிறகு, நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சூழல்களை உருவாக்குகிறோம் என்று மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் யாரும் அறியாதது அல்ல. இதுவரையிலான அரசுகள் சலுகைகளை அளிப்பதில் உச்சம் தொட்டவை என்றால், இந்த அரசு முழுக்கத் தொழில் நிறுவனங்களுக்கேற்பச் சட்டங்களை மாற்றியமைப் பதில் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மத்திய ஆட்சிக் கேற்பத் தாங்கள் ஆளும் மாநிலங்களையும் மாற்றிவருகின்றன பாஜக மாநில அரசுகள். இவற்றையெல்லாம் முந்திவிட்டது தெலங்கானா அரசு. மத்திய அரசுக்கே ‘வழிகாட்டுகிறார்’தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தன்னுடைய ‘புதிய தொழில் அனுமதிக் கொள்கை’ மூலம்.
சந்திரசேகர ராவின் புதிய திட்டத்தின்படி, இனி தொழில் நிறுவனங்கள் ‘தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறும் உரிமை’யைப் பெறுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்ட பாணியில் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டம் இது. இதன்படி, ஒரு தொழிலதிபர் தொழில் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து, அவருக்கான அனுமதி விரைவில் கிடைக்காதபட்சத்தில், அவருக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏன் என்று அறியும் உரிமை தொழில்முனைவோருக்குக் கிடைக்கிறது. அதாவது, தாமதம் ஏன் என்ற தகவலை தொழில்முனைவோருக்கு அதிகாரிகள் தாமாகவே தெரிவிக்க வேண்டும். மனுக்களைப் பரிசீலிக்காமல் வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தாமதப் படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். கேட்க நன்றாக இருப்பதுபோலத் தோன்றுகிறது, இல்லையா?
உண்மைதான். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது திட்டம் என்னவோ நல்லதாகவே தெரிகிறது. ஆனால், உள்ளே சென்று பார்க்கும்போதுதான் பூதங்கள் கிளம்புகின்றன. இப்படியான ஒரு திட்டத்துக்கு அரசு நிர்ணயித்திருக்கும் காலக்கெடு என்ன தெரியுமா? ரூ.200 கோடிக்கும் மேல் மதிப்புள்ள தொழில் திட்டங்கள் என்றால் 2 வாரங்களுக்குள் - அதாவது 15 நாட்களுக்குள் - அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். சிறிய திட்டங்கள் என்றால், அதிகபட்சம் ஒரு மாதம் வரையில் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் காலக்கெடுவுக்குள் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கத் தவறினால், அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகக் கருதி தாமாகவே தொழில்முனைவோர் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
இந்தியாவில் தொழில்முனைவோர் அரசு இயந்திரத்தால் இழுத்தடிக்கப் படுவதும் ஊழலால் விரட்டப்படுவதும் எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை பெரும்பான்மை தொழில்முனைவோர் அந்த இயந்திரத்துக்குத் தேவையான பணத்தால், எந்த அனுமதியையும் பெற்றுவிடுகிறார்கள் என்பது; எல்லா விதிகளையும் மீறி சூழலைச் சுரண்டுபவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது. ரூ. 200 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் என்றால், அவை எத்தனை பெரிய திட்டங்களாக இருக்கும் என்பது நாம் அனுமானிக்க முடியாததல்ல. அதற்கான அனுமதி பல்வேறு துறைகளோடும் தொடர்புடையது. முக்கியமாக, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையோடும் சுற்றுச்சூழலோடும் இயற்கை வளங்களோடும் தொடர்புடையது. சந்திரசேகர ராவின் புதிய திட்டம் இதையெல்லாம் எந்த அளவுக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது?