தலையங்கம்

நிதித் துறையின் பிரச்சினை மட்டும் அல்ல வாராக் கடன்கள்!

செய்திப்பிரிவு

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை என்பதால், முழுக் கவனமும் வங்கித் துறையின் மீது திரும்பியிருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி 2 முறை வட்டி வீதங்களைக் குறைத்தபோதிலும் வங்கிகள் அதை அப்படியே பின்பற்றி, தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய வேண்டிய அவசியமே இல்லை. எல்லா வங்கிகளுமே - குறிப்பாக அரசு வங்கிகள் - வாராக் கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பாக்குவெட்டியின் இடையில் சிக்கிய பாக்கைப் போல வங்கிகள் நிலை இருக்கிறது.

2000-01 நிதியாண்டில் வங்கிகளின் வாராக் கடன் அளவு 12% ஆக இருந்தது. அரசும் வங்கிகளும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 2008-09 நிதியாண்டில் அது 2.5% ஆகக் குறைந்தது. பொருளாதாரச் செயல்பாடுகளில் ஏற்பட்ட மீட்சி, கடன் வசூலிப்பு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தியது, நிதிச் சொத்துகளைத் திருத்தியமைக்கவும் கடன்களை வசூலிக்கவும் சட்டமியற்றியது ஆகிய காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு வாராக் கடன் அளவு திரும்பி, 2014 செப்டம்பரில் 4.6% ஆக உயர்ந்தது. 2015-16-ல் இது 6% ஆக உயரக்கூடும் என்று ‘கிரிசில்’ என்ற தர நிர்ணய அமைப்பு தெரிவிக்கிறது. இந்த 6% என்பது ரூபாய் அளவில் 5.3 லட்சம் கோடி. இதில் கவலை தரும் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்திய வங்கித் துறை நடவடிக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கு, அரசுத் துறை வங்கிகள் வாயிலாகவே நடப்பது; அதாவது, வாரக் கடன்களில் பெருமளவு பொதுத்துறை வங்கிகளுடையதாக இருப்பது!

இப்படிக் குவியும் வாராக் கடன்கள் ஒரு தற்காலிகமான பிரச்சினைதான்; பொருளாதாரம் மேம்படத் தொடங்கியதும் இது தானாகக் கரைந்து காணாமல் போய்விடும் என்பது சந்தைப் பொருளாதாரவாதிகளின் பார்வைகளில் ஒன்று. அதனாலேயே, வாராக் கடன்களைப் பற்றிப் பேசும்போது, மீண்டும் மீண்டும் ‘மறுகடன் வழங்கல்’ அல்லது ‘கடன் விற்றல்’ போன்ற முறைகளைக் கையாள்வதுபற்றிப் பேசுவதே வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியச் சூழலில் இதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் நேரும் நிலை இங்கு வெறுமனே பொருளா தாரப் போக்கால் மட்டுமே உருவாவதில்லை.

நம்முடைய கடன் வழங்கல் முறைக்கும் அரசியல் செல்வாக்குக்கும் உள்ள கள்ள உறவு யாரும் அறியாதது அல்ல. பல பெருநிறுவனங்களின் வாராக் கடன்களின் பின், சூட்சமம்மிக்க திட்டமிடல்கள் இருப்பதும் நாம் அறியாதது அல்ல. ஒவ்வொரு ஊழல்கள் வெளியாகும்போது, அதில் சம்பந்தப்பட்டிருக்கும் நிறுவனங்களின் முதலீட்டுக்கும் வங்கிகளின் கடன்களுக்கும் உள்ள நெருக்கம் நம்முடைய கடன் வழங்கல் முறையில் புரையோடியிருக்கும் ஊழலுக்குச் சான்று. ஆகையால், இந்தப் பிரச்சினையை வெறுமனே நிதித் துறை சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அரசியல்ரீதியாகவும் நாம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. கடன் வழங்கல் முறை தொடர்பாகக் கடுமையான நெறிமுறைகளை நாம் வகுக்காவிட்டால் எதிர்காலத்தில் வாராக் கடன்கள் நாட்டைப் பெரிய பள்ளத்தில் தள்ளிவிடக் கூடும்!

SCROLL FOR NEXT