பூசல்கள் பிரிவினையை உருவாக்குகின்றன. சரி, பிரிவினை பூசல்களைத் தீர்க்கின்றனவா? பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலங்களாக்கிவிட்டால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற கருத்துக்கு நேரெதிர் உதாரணமாகிவிடுமோ என்று தோன்றுகிறது ஆந்திரம் - தெலங்கானா பிரிவினை. ஒரே தாய்மொழியைக் கொண்டவர்களா இவர்கள் என்று கேட்கும் அளவுக்கு, நாளுக்கு நாள் பூசல்களும் மோதல்களும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. இரு மாநிலங்களிலும் மாணவர்கள் மாணவர்களோடும், வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்களோடும், அரசு ஊழியர்கள் அரசு ஊழியர்களோடும் மோதிக்கொள்கிறார்கள். இந்த மோதல்களின் உச்சகட்டம் தண்ணீர் பகிர்வு தொடர்பாக நாகார்ஜுன சாகர் அணைக்கு அருகில் இரு மாநிலக் காவல் துறையினரும் மோதிக்கொண்டிருப்பது.
தெலங்கானாவை முன்னேற்றுவோம் என்ற முழக்கத்துடன் பிரிவினையிலும் பின் தேர்தலிலும் வென்ற தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசால், கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளைக்கூட ஹைதராபாதைத் தாண்டி மாநிலம் முழுவதற்கும் கொண்டுசெல்ல முடியவில்லை. பிரிவினைக்குப் பின் தண்ணீர், மின்சார வசதிகளில் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் ஆந்திர மக்கள். ஆனால், ஆந்திரத்தை ஆளும் தெலுங்கு தேச அரசோ, புதிய தலைநகரம் அமராவதியை நிர்மாணிப்பதிலேயே தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையையும் செலவிட்டுக்கொண்டிருக்கிறது. இரு மாநிலங்களிலுமே விவசாயத்துக்குப் பெரிய அடி விழுந்திருக்கிறது. கிராமப்புறங்களை வறுமை சூழ்கிறது. ஆனால், இரு அரசுகளும் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.
தெலங்கானா தன் முதலாண்டு வரவு-செலவு அறிக்கையில் ரூ. 531 கோடி உபரி வருவாய் காட்டியிருக்கிறது. இதன் காரணமாக, தெலங்கானா வளமான மாநிலமாகி விட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஏனென்றால், மாநிலத்தின் வருவாயில் பெரும்பகுதி தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் வருவாய் மூலம் பெறப்பட்டிருக்கிறது. இந்தத் துறையின் வருவாய் குறைந்தாலோ, இத்துறைக்கு உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகள் இங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தாலோ அதற்கு தெலங்கானாவும் பெரும் விலை கொடுக்க நேரிடும். தவிர, எல்லோருக்குமான தொழிலும் அல்ல அது. ஆந்திரம் தன் வரவு - செலவு அறிக்கையில் ரூ.7,300 கோடி பற்றாக்குறையைக் காட்டியிருக்கிறது. முன்பு அதன் வசமிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் அவற்றின் வருவாயும் தெலங்கானாவுக்குச் சென்றதால் ஏற்பட்டிருக்கும் இழப்பு இது.
ஆக, இரு மாநிலங்களுமே எல்லோருக்குமான தொழில் வளர்ச்சியை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. முக்கியமாக, இரு மாநிலங்களுக்கும் இடையே சொத்துகளைப் பிரித்துக்கொள்ளும், வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் வேலை இன்னும் முற்றுப்பெறாமலேயே இருக்கிறது. ஆனால், இரு மாநில முதல்வர்களும் எதிரிகளைப் போலவே நடந்துகொள்வதால், சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் முடிவு காணப்படாமலேயே இருக்கின்றன. இந்நிலையில், சமீபத்திய லஞ்சப் புகார் / ஒட்டுக்கேட்பு விவகாரம் எரிகிற கொள்ளியில் மேலும் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. இரு மாநிலங்களையும் ஆளும் கட்சிகள் இன்னொரு மாநிலத்தின் நலனில்தான் தம்முடைய மாநிலத்தின் நலன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாத வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வில்லை. அதற்கு, பிரிவினைக்கு முன் இரு தரப்பிலும் வளர்த்தெடுக்கப்பட்ட வெறுப்புத் தீயை இப்போதேனும் இரு தரப்பும் அணைக்க முன்வர வேண்டும்!