தலையங்கம்

ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை!

செய்திப்பிரிவு

தீண்டாமைக் கிராமங்களை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “குறுகிய எண்ணங்கள் ஊறிய சாக்கடைகள், அறியாமை - குறுகிய மனப்பான்மை நிறைந்த இருள் குகைகள்” என்று குறிப்பிடுவார். இந்தியாவில் இப்படிப்பட்ட சாக்கடைகள், இருள் குகைகள் இன்னும் எத்தனையெத்தனை இருக்கின்றன என்று தெரியவில்லை. தீண்டாமையின் வடிவங்களும் எத்தனையெத்தனை என்று தெரியவில்லை.

கர்நாடக மாநிலம், துமகூரு கிராமத்தின் சிகை திருத்தும் தொழி லாளர்கள், தலித்துகளுக்கு முடி வெட்டுவதில்லை என்று வெளியான செய்தி தரும் அதிர்ச்சியை விடவும் அயர்ச்சியே அதிகம் நம்மைச் சூழ்கிறது. துமகூரு சம்பவம் வெளியே தெரிந்ததும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் எத்தனை காலம்தான் இப்படியான காட்டுமிராண்டித்தனங்களால் நம்மையே நாம் அவமானப்படுத்திக்கொள்வோம்?

சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. முக்கியமான காரணம் என்ன? ‘நம் ஒவ்வொருவரிடமும் மாற்றம் நிகழ வேண்டும்; பல நூறாண்டுக் காலமாகப் படிந்திருக்கும் நிலவுடைமைச் சாதிய மனோபாவத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் வெளியேற வேண்டும்’ என்றெல்லாம் மேடையில் பேசும் எவரும் சொல்லிவிட்டுச் சென்றுவிடலாம். ஒரு அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இதையெல்லாம் தாண்டி யோசிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.

நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் மரியாதைக்கும் அடிப்படைக் காரணம், சமூகநீதியை நோக்கி அரசியல் அமைப்புகளும் அரசும் எடுத்துவைத்த அடிதான் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். பல ஆண்டுகளாக அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகத்தான் இன்று ஆட்சி அதிகாரத்திலும் பிற அங்கங்களிலும் தலித்துகளின் பங்கேற்பு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இருக்கிறது. ஆனால், அந்தச் சமூகநீதிப் பயணத்தின் ஆரம்ப எல்லையிலேயே நாம் தேங்கிவிட்டோம் என்பதையே துமகூரு சம்பவம் போன்றவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

சமத்துவத்தை நோக்கிய சமூகநீதிப் பயணத்தில் முக்கியமான இடத்தை வகிப்பது அதிகாரப் பகிர்வு. சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களையும் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்றால், அதற்குப் பிரதிநிதித்துவம் முக்கியம். ஆனால், இங்கே பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது? ஏற்கெனவே தலித்துகளுக்கு நம்முடைய அரசியல் கட்சிகள் கொடுக்கும் இடம் குறைவு எனும் சூழலில், அந்தக் குறைந்தபட்ச இடமும் எவ்வளவு பாவனை அரசியல் சார்ந்ததாக இருக்கிறது என்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று அம்பலப்படுத்துகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர, வேறு எந்த தேசியக் கட்சியிலும் தலைமைப் பதவிக்கு தலித்துகள் பரிசீலிக்கப்படுவதே இல்லை என்பதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தேசியக் கட்சிகள் மட்டும் தான் இப்படி இருக்கின்றன என்றில்லை; மாநிலக் கட்சிகளிலும் தலித்துகளுக்கு முக்கியப் பதவிகளோ அதிக எண்ணிக்கையில் பொறுப்புகளோ தரப்படுவதில்லை. ஆக, அரசியலில் எப்படி அவர்கள் ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுகிறார்களோ அவ்வாறே அதிகார அமைப்பிலும் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

நம்முடைய சகோதரர்களுக்கு, அவர்களுக்கு உரிய கண்ணியமான, சமமான இடம் அளிக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம் என்றால், இங்கே நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய காரியங்கள் என்று நிறைய இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு அப்படியான கடமைகளில் முக்கியமானது, தம்முடைய சொந்த அமைப்பில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உண்மையாக அளிப்பது!

SCROLL FOR NEXT