தலையங்கம்

என்றும் தொடரட்டும் இந்த உறவு

செய்திப்பிரிவு

மோடியின் சீனப் பயணம் இந்திய-சீன உறவுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்திய-சீன உறவில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருந்த பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், ராஜீய உறவுகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் அடுத்த கட்டம் இது எனலாம்.

மோடியின் சீனப் பயணம் நல்லுறவின் வெற்றி என்றால், கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகையால் ஏற்பட்ட நட்புறவே அதற்கு அடித்தளம் என்பதை மறந்துவிட முடியாது. ஜி ஜின்பிங்கின் இந்திய வருகையின்போது, ‘வளர்ச்சி அடிப்படையிலான நெருக்கமான கூட்டுறவு’ என்ற அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டது. மோடியின் சீனப் பயணமோ அந்த அம்சத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் மோடியும் சீனப் பிரதமர் லி கெகியாங்கும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையே இதற்கு சாட்சியம்.

இந்திய-சீனப் பொருளாதார உறவின் தன்மைகுறித்துச் சில கேள்விகளுக்கு இந்த அறிக்கை விடைகாண முயன்றிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 4.5 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. ஆனால், இதில் ஒரு தரப்பு சார்பான வளர்ச்சியே அதிகரித்திருக்கிறது. இந்தச் சமச்சீரற்ற நிலையை இரண்டு தரப்புகளும் கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாகவும், இந்தப் பிரச்சினையைக் களைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகையின்போதும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

இந்தப் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட ரூ. 1.4 லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தக முதலீடுகளுக்கான 26 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு வலுப்பட்டு வருவதைக் குறிக்கின்றன. இந்தப் பயணத்தில், புவி வெப்பமாதல் குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையும் தகுந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

எனினும், வெளியுறவுரீதியிலான பிளவு இன்னும் நீடிக்கிறது. இந்தப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையும், மோடியின் பேச்சுகளிலும் இந்தப் பிரச்சினைபற்றி கோடிகாட்டப்பட்டது. எல்லைப் பிரச்சினைகுறித்தும் கூட்டறிக்கையில் பேசப்பட்டிருக்கிறது. எல்லைப் பிரச்சினைகுறித்த பேச்சுவார்த்தைகள், அவை தொடங்கியதிலிருந்து மிகவும் மெதுவாகவே முன்னேறிக்கொண்டிருக்கின்றன. எனினும், இரு தரப்புகளும் தீர்வு காண முயன்றுகொண்டிருப்பதால் எல்லையில் அமைதி காக்கப்படும் என்ற உத்தரவாதம் இரண்டு தரப்புகளிடமிருந்தும் வெளிப்படுகிறது. ‘ஒரே பிராந்தியம், ஒரே பாதை’ என்ற சீனாவின் கனவுத் திட்டத்தில் இந்தியா பங்கேற்பதுகுறித்த ஆர்வத்தை இந்தியக் குழுவினர் வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தியாவின் அண்டை நாட்டினர் மீது சீனா செலுத்தும் ஆதிக்கம் தொடர்பான இந்தியாவின் அச்சத்தையே இது காட்டுகிறது. எனினும், ட்சிங்குவா பல்கலைக்கழகத்தில் மோடி ஆற்றிய உரையில் வெளியுறவு தொடர் பான சாதகமான தொனி வெளிப்பட்டது குறிப்பிடத் தக்கது.

வலுவான இந்திய-சீன உறவுக்கு வித்துக்களாக இந்த ஜி ஜின்பிங்கின் பயணமும் மோடியின் பயணமும் அமையுமென்றால், பொருளாதாரரீதியில் மட்டுமல்லாமல், ஆசியாவின் அமைதிக்கும் மிக முக்கியமான தருணங்களாக இந்தப் பயணங்கள் கருதப்படக்கூடும்!

SCROLL FOR NEXT