தமிழகத்தின் நியாயத்தை அங்கீகரித்து, முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சுமார் 119 ஆண்டுகள் வயதுடைய முல்லைப் பெரியாறு அணை நாட்டில் உள்ள பழைய வலுவான அணைகளில் ஒன்று. இன்றைக்கும் அதைக் கட்டிய பென்னி குயிக்கின் பேர் சொல்லக்கூடியது. கேரளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு வந்தாலும், அதைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் பெரும் பகுதி கேரளத்துக்குத்தான் செல்கிறது. கேரளத்தின் உணவுத் தேவை தமிழகத்தையே பெரும் பகுதி சார்ந்திருந்தும், கேரள அரசியல்வாதிகள் இதை அரசியல் ஆக்கினார்கள். “பழைய அணை என்பதால் அதிக உயரத்துக்குத் தண்ணீர் தேக்கினால் அணை உடைந்து கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்படும்” என்று கூறிய கேரளம், பாதுகாப்பைக் காரணம் காட்டி 'அணையில் 136 அடி உயரத்துக்கு மேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது, அணையின் பாதுகாப்புக்காகக் கேரள அரசு சார்பில் அணைப் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படுகிறது' என்று கேரள சட்டப் பேரவை 2006-ல் தீர்மானம் நிறைவேற்றியது. அணையின் கட்டுமானம் அந்தக் காலத்து முறையில் இருந்தாலும், அணை வலுவாகவே இருக்கிறது என்று மத்திய நீர்வளத் துறையினரும் நிபுணர்களும் ஆராய்ந்து அளித்த ஆய்வறிக்கைகளை அது பொருட்படுத்தவில்லை. இந்நிலையில்தான், தமிழக அரசு இதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் ‘கேரள சட்டப் பேரவை இயற்றிய தீர்மானமும் அது அமைத்த ஆணையமும் சட்டத்துக்கு முரணானவை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தீர்ப்பு வந்தவுடன் இரு மாநிலங்களிலும் அரசியல்வாதிகள் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் தீர்ப்பு ஒரு வெற்றியாக்கப்பட்டு, வெற்றிக்கு யார் காரணம் என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. கேரளத்திலோ, தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆதரவுடன் முழு அடைப்பு நடந்திருக்கிறது. இந்த இரு போக்குகளுமே முதிர்ச்சியற்றவை; இரு மாநில மக்களிடையே வெறுப்பை வளர்ப்பவை. முக்கியமாக, தமிழக அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது அவசியம். ஏனென்றால், ஏனைய நதிநீர்ப் பிரச்சினைகளைப் போல அல்ல இந்தப் பிரச்சினை. ஏனைய பிரச்சினைகளில் அரசியலாக்கப்படும் மையம் பெரும்பாலும் நீர்ப் பங்கீடு சார்ந்தது. இதிலோ அரசியலாக்கப்படும் மையம் அணையின் பாதுகாப்பும் மக்களின் உயிரும். கேரள அரசியல்வாதிகளால் எளிதில் தீப்பற்றவைக்கக் கூடிய களம் இது. தமிழக அரசியல்வாதிகள் இதன் நுட்பமான சிக்கலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நதிநீர்ப் பிரச்சினைகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப் பட்டிருக்கின்றன. முக்கியமாக, பல்லாயிரக் கணக்கான விவசாயிகள், ஏழை விவசாயத் தொழிலாளர்களோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் விளையாட்டை அங்கு காட்ட வேண்டாமே!