தலையங்கம்

வேரடி மண்ணோடு களைந்தெறிக!

செய்திப்பிரிவு

பஞ்சாபில் சமீபத்தில் நடந்திருக்கும் கொடூரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தணியவோ ஓயவோ போவதில்லையோ என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது. கடந்த ஏப்ரல் 29 அன்று, பஞ்சாப் மாநிலத்தின் மோகா நகரத்துக்கு அருகே ஓடும் பேருந்திலிருந்து பதின்வயதுப் பெண்ணும் அவளுடைய தாயும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்தார். அவளுடைய தாய் படுகாயமடைந்தார். டெல்லி சம்பவத்துக்குப் பிறகு, இந்திய ஆண் களின் மனநிலையில் கொஞ்சமாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் விதத்தில்தான் இந்த வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

பயணச் சீட்டுக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று நடத்துநரிடம் அந்தத் தாய் முறையிட்டிருக்கிறார். அந்த நடத்துநரோ பதிலுக்கு அவரிடம் அத்துமீற ஆரம்பித்திருக்கிறார். ஓட்டுநரிடம் உதவி கேட்டு அந்தப் பெண் செல்ல, ஓட்டுநரோ வேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவரது மகள், மகன் ஆகியோரும் மேலும் சத்தமாக எதிர்ப்பைக் காண்பிக்க முயலவே அந்த இளம் பெண்ணைத் தூக்கிப் பேருந்துக்கு வெளியே வீசியிருக் கிறார்கள். தொடர்ந்து அந்தத் தாயையும் அவரது மகனையும் தூக்கி விசியிருக்கிறார்கள். கற்பனையே செய்துபார்க்க முடியாத கொடூரம்! இதைத் தொடர்ந்து வெளிப்பட்ட உண்மைகள் மேலும் நம்மை அதிரவைக்கின்றன.

அந்தப் பேருந்து நிறுவனம் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்குச் சொந்தமானது. அவருடைய மகனும் துணை முதல்வருமான சுக்விர் சிங் பாதலும் அந்தப் பேருந்து நிறுவனத்துக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று முதலில் சொல்லியிருக்கிறார். பிறகு, இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் போதாதென்று சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த இருவர் தெரிவித்த கருத்துகள் அரசியல்வாதிகளில் பலர் எந்த அளவுக்கு மனிதத்தன்மையற்றவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதற்குச் சான்று. பஞ்சாப் கல்வி அமைச்சர் சுர்ஜித் சிங் ரக்ரா அந்தப் பெண்ணின் மரணம் ‘கடவுளின் சித்தம்’ என்றார். மோகா எம்.எல்.ஏ. ஜோகிந்தர்பால் ஜெயினோ ‘நடந்தது ஒரு விபத்துதான். எந்தப் பேருந்திலும் அது நடக்கலாம்’ என்று உதிர்த்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பான சில கேள்விகள் நம் முகத்திலறை கின்றன. முதலாவது, பேருந்தில் இருந்த 15 பயணிகளில் யாருமே அந்தத் தாய்க்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவ முன்வரவில்லையே, ஏன்? பெண்கள் மீது வன்செயல்கள் ஏவப்படும்போது அதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அளவுக்கு இந்திய மக்கள் சுரணையற்றவர்களாக ஆகிவிட்டார்களா? செல்வாக்கு மிகுந்தவர்களின் பேருந்து என்பதால், அதன் ஊழியர்கள் இந்த அளவுக்குச் சட்டத்தையே உடைத்து நொறுக்கும் துணிவுபெற்றார்களா?

மிக மோசமான குற்றவாளிகள் பலருக்கு அரசியல்வாதிகளின் அரவணைப்பு கிடைப்பது இந்திய அரசியலின் யதார்த்தம். சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவர்கள் பெண்கள் மீதான அத்துமீறலையும் வன்கொடுமையையும் ‘கடவுளின் சித்தம்’, ‘விபத்து’ என்றெல்லாம் சொல்வார்கள் எனில், பெண்கள் உரிமையைப் பாதுகாக்கும் காரியத்தை இந்தியாவில் எங்கிருந்துதான் தொடங்குவது?

இப்போது சுக்விர் சிங் பல்டி அடித்திருக்கிறார். ‘பேருந்து உரிமையாளர் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால், இது போன்றதொரு சம்பவத்தைத் தண்டிக்காமல் விட முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். பேச்சுடன் அவர் நின்றுவிடக் கூடாது. உரிய நீதி உடனடியாகக் கிடைக்கும்படி அவரும், அவர் அங்கம் வகிக்கும் ஆட்சியும் செய்யவில்லையென்றால், அதுதான் மிகப் பெரும் வன்செயல்.

சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் மீதான வன் செயல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆணாதிக்க மனோ பாவத்தின் விஸ்வரூபம்தான் அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள். அந்த மனோபாவத்தை வேரடி மண்ணோடு களைந்தெறியாமல் வன் செயல்களைத் தடுத்து நிறுத்துவது ஒருபோதும் சாத்தியப்படாது.

SCROLL FOR NEXT