பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டது. செவ்வாய்க்கிழமை காலை அவரவர்களுக்கான துறைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன. தனக்கென்று ஒரு காலக்கெடு நிர்ணயித்து பிரதமர் மோடி செயல்படத் தொடங்கிவிட்டதை இவை உணர்த்துகின்றன. பிரதமர் உட்பட 24 கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்பில் 10 இணையமைச்சர்களும், பிற அமைச்சர்களின் கீழ் பணியாற்ற 12 இணையமைச்சர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
பொதுவில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வெவ்வேறு வாதங்கள் இருக்கின்றன. பெரிய அமைச்சரவை, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும் விரைவான செயல்பாட்டுக்கும் உதவும் என்பது ஒரு வாதம். மாறாக, சின்ன அமைச்சரவையே சிறப்பாகச் செயல்பட முடியும்; தவிர, தேவையற்ற நிர்வாகச் சிக்கல்கள், செலவுகள் இல்லாமல் செயல்பட வழிவகுக்கும் என்பது இன்னொரு வாதம். வளர்ந்த நாடுகளில் அமைச்சரவை என்பது செயல்பாடுகளைப் பிரதானமாகக் கொண்டு பார்க்கப்படுவது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பிரதிநிதித்துவமும் முக்கியத்துவம் பெறுவது. இதுவரையிலான அனுபவங்கள் நமக்கு உணர்த்தியிருப்பது, அமைச்சரவையின் அளவு அல்ல; அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளே அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாடுகளைத் தூக்கிப்பிடித்திருக்கின்றன என்பதுதான்.
மோடி, சிறியதும் அல்லாமல், பெரியதும் அல்லாமல் மிதமான ஓர் அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார். தவிர, முக்கியமான சில துறைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, போக்குவரத்துத் துறை அமைச்சரவையோடு நெடுஞ்சாலை, தரைவழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரவையோடு வீடமைப்பு, நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறைகளும், நிதி அமைச்சரவையோடு கம்பெனிகள் விவகாரத் துறையும் இணைக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், குடிநீர், சுகாதாரம் ஆகியவை ஒரே அமைச்சரவை வசமும், சிறுதொழில், நடுத்தரத் தொழில், குறுந்தொழில் அனைத்தும் ஒரே அமைச்சரவை வசமும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் இடையே கோப்புகள் பயணிப்பது இதனால் தடுக்கப்படும். ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன் முடிவுகளும் விரைந்து எடுக்க இது உதவும். முதல்முறையாக, நதிநீர் மேலாண்மைக்கு உரிய கவனம் அளிக்கப்பட்டு, நீர்வளத் துறை அமைச்சகத்தோடு, ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கையைச் சுத்தப்படுத்தும் தனிப்பொறுப்பும் அளிக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
தேர்தல் முடிந்து அமைச்சரவையும் பதவியேற்றுவிட்டது, இனி மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும். அது ஓரளவுக்குப் புதிய அரசின் பாதையை நமக்குக் காட்டும். ஒருபுறம் புதிய திட்டங்களை தேசம் எதிர்பார்க்கும் அதே தருணத்தில், ஏற்கெனவே நம் கண் முன் பிரம்மாண்டமாக நிற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ரூபாயின் மதிப்பு சரிவு, தொழில்துறை மந்த நிலை, அதிகரித்துவிட்ட வெளிவர்த்தகப் பற்றாக்குறை, உயர்ந்துவரும் வருவாய் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் எதிர்பார்க்கிறது. தீவிர முயற்சிகளையும் கடுமையான உழைப்பையும் துணிச்சலான முடிவுகளையும் கோரும் காலகட்டம் இது. புதிய அமைச்சரவை உடனே களம் புக வேண்டும்!