தலையங்கம்

நீரைக் காப்பாற்றுங்கள்!

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டைப் போல இல்லாமல் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவக்காற்றால் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என்று முதல்நிலை வானிலைக் கணிப்பு தெரிவிக்கிறது.

தென்மேற்குப் பருவக்காற்றால் வீசும் மழை அளவு இந்த ஆண்டு 93% அளவு இருக்கலாம் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கணிப்பில் 5% கூடுதலாகவோ 5% குறைவாகவோ இருக்கலாம் என்றும் அது தெரிவிக்கிறது. ஜூன் - செப்டம்பர் காலத்தில் பதிவான மழை அளவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பற்றாக்குறையாகவோ சரசாரிக்கும் குறைவாகவோ மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று நீண்ட காலமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள மழை அளவுச் சராசரிகளை ஒப்புநோக்கும்போது தெரியவந்துள்ளது. இந்தப் பருவத்தில் ஆண்டு தோறும் பெய்யும் அளவைவிட அதிகமாகப் பெய்வதற்கான வாய்ப்பே கிடையாது என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஏப்ரல் மாதமே கணிக்கப்படும் அளவில்தான் மழை இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். இதை ஒரு அடையாளக் குறியீடாக வேண்டுமானால் கொள்ளலாம்.

உதாரணம் காட்ட வேண்டும் என்றால், பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவிய எல்-நினோ நிலைமை, தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்தபடி சிதைக்காமல் அப்படியே விட்டுவிட்டது. இப்போதெல்லாம் எல்-நினோவின் இயல்புகளே வேகமாக மாறிவருவதைப் போலத் தோன்றுகிறது. எனவே, மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாதத் தொடக்கத்திலோதான் இது தெளிவாகத் தெரியவரும். ஜூன் மாதத்தில் வெளியாகும் மழை எதிர்பார்ப்பு அறிக்கைகள்தான் ஒட்டுமொத்தமாக இருக்கும். அது மாதந்தோறும் பெய்த மழை அளவு, நாட்டின் 4 பிராந்தியங்களில், பருவங்களில் பெய்த மழை அளவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல்-நினோ சூழல் கடந்த ஆண்டைவிட வலுவாக இருக்கிறது. மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இது கவனிக்கத் தக்க அளவுக்கு இருக்கிறது. கடலின் மேல் மட்டத்திலேயே வெப்ப அளவில் 0.5 டிகிரி அதிகமாகியிருக்கிறது. இது பருவமழைக் காலத்தின்போது மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது. இதுதான் நீண்டகால மழை அளவு அடிப்படையிலான சராசரி அடிப்படைக் கணிப்பில் இடம்பெற்றிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாகப் பெய்த பருவமழையின் அளவு துளியும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்பதே உண்மை. இந்தியாவில் விவசாயம், குடிநீர் ஆரம்பித்து எல்லாவற்றிலும் நீர்த் தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சினையாக உருவாகிவருகிறது. எத்தனையோ ஜீவநதிகள் ஓடுவதும், வளம் மிக்கதுமான நாடு என்ற நிலையிலிருந்து வறட்சியான நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றிய எச்சரிக்கை உணர்வு அரசுக்கோ மக்களுக்கோ இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை. நாட்டில் உள்ள நீர் ஆதாரங்களைக் காப்பதிலோ, நீர்வழிகளைப் பராமரிப்பதிலோ கொஞ்சம்கூட அக்கறையின்றிதான் மத்திய, மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் இருக்கின்றன. இதன் விளைவுதான் நீரின் மரணம்.

தேவையான மழைநீரைப் பெறுவது நம் கையில் இல்லை. ஆனால், பெய்யக்கூடிய சொற்ப மழைநீரையும் நமது நீர்நிலைகளில் இருக்கும் நீரையும் காப்பாற்ற முடியுமல்லவா? அதைச் செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்?

SCROLL FOR NEXT