பயங்கரவாதச் செயல்களையும், குற்றச்செயல் புரியும் கும்பல்களின் குழு நடவடிக்கைகளையும் (ஜி.சி.டி.ஓ.சி.) கட்டுப்படுத்த குஜராத் அரசால், ‘ஜி.சி.டி.ஓ.சி. மசோதா-2015’ மீண்டும் கொண்டுவரப் பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் நிராகரிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் குஜராத் சட்டப்பேரவை நிறைவேற்றியிருக்கிறது. ஏற்கெனவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டவையும், மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்தவையுமான ‘தடா’, ‘பொடா’ சட்டங்களின் மறு உருவே இது என்பதில் சந்தேகம் இல்லை. பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த உதவியதைவிட அப்பாவிகள் பலரைச் சிறையில் தள்ளவும் துன்புறுத்தவும், மனித உரிமைகள் மீறப்படவும் இந்தச் சட்டங்கள் பெருமளவுக்குக் காரணமானதால்தான் இவை கைவிடப்பட்டன.
பாகிஸ்தானுடன் 500 கிலோமீட்டர் நில எல்லையைக் கொண்டிருப்பதால் குஜராத் மாநிலம் மட்டுமே அதிக பயங்கரவாத ஆபத்துகளைச் சந்திக்க நேர்வதாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை. மகாராஷ்டிரத்தில் அமலில் இருக்கும் எம்.சி.ஓ.சி.ஏ. சட்டத்தைப் போலத்தான் இதுவும் என்று குஜராத் மாநில அரசு தெரிவிக்கிறது. எம்.சி.ஓ.சி.ஏ. சட்டத்தை இயற்றியது முந்தைய மகாராஷ்டிர அரசுதான் என்றாலும் அதற்கு ஒப்புதல் வழங்கியது பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பதை மறப்பதற்கில்லை.
குஜராத்தின் புதிய சட்டப்படி கைது செய்யப்படுகிறவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தாமல் 180 நாள்கள் வரை அதாவது 6 மாதங்களுக்கு போலீஸ் காவலில் வைத்திருக்கலாம் என்ற பிரிவும், போலீஸ் அதிகாரி முன்னிலையில் அளிக்கும் வாக்குமூலத்தையே நீதிமன்றத்தில் ஆதாரமாக அரசுத் தரப்பு தாக்கல் செய்யலாம் என்பதும் மிகவும் ஆட்சேபத்துக்கு உரியவை. சித்ரவதை மூலம் வாக்குமூலங்களை வாங்குவது எளிது என்பது யாவரும் அறிந்த ஒன்று. எனவே, அப்படிப்பட்ட வாக்குமூலங்களை வழக்குக்கு ஆதாரமாகக் கொள்வதைச் சற்றும் ஏற்கவே முடியாது. கைதுசெய்யப்பட்டவரை 90 நாட்களுக்கு நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் காவலில் வைக்கலாம் என்பதே கொடூரமானது. அதை 6 மாதங்களாக நீட்டிப்பது அதைவிட மோசமானது. போலீஸ் காவலில் இருப்பவர்களை அடித்து மிரட்டி வாக்குமூலங்கள் வாங்கப்படுவதும், சில சமயங்களில் காவலில் இருப்பவர்கள் அடித்துக் கொல்லப்படுவதும் அவ்வப்போது தெரியவரும் நிலையில் குஜராத் அரசு கொண்டுவரவிருக்கும் சட்டம், அரசியல் சட்டம் குடிமக்களுக்கு அளிக்கும் அடிப்படை உரிமையையே பறிக்கக் கூடியது. மோடி முதல்வராக இருந்தபோது நிராகரிக்கப்பட்ட இந்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இப்போது பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் குஜராத் அரசு கொண்டுவந்திருக்கிறது.
பஞ்சாபில் பயங்கரவாதச் செயல்கள் அதிகமானபோது ‘தடா’ சட்டமும் இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடந்த பிறகு ‘பொடா’ சட்டமும் மகாராஷ்டிரத்தில் 1993-ல் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்த பிறகு எம்.சி.ஓ.சி.ஏ. சட்டமும் கொண்டு வரப்பட்டன. ஏதாவதொரு சம்பவம் மிகப் பெரியதாக நடந்தால் உடனே அவசர கதியில் இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அச்சத்திலும் பீதியிலும் இருக்கும் சமூகத்தையும், இது அவசியம்தான் என்ற மனநிலையில் இருக்கும் உளவியலையும் அரசுகள் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே உள்ள சட்டங்களை முறையாகப் பயன்படுத்துவதையும், உளவு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் அரசு மேற்கொண்டாலே போதும். எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவந்தால் ஜனநாயகத்துக்குப் பதில் கொடுங்கோன்மைதான் தாண்டவமாடும்.