தலையங்கம்

சோதனையும் சுயபரிசோதனையும்

செய்திப்பிரிவு

கடந்த ஓராண்டில் மிகப்பெரும் வளர்ச்சியையும் கடுமையான வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறது பாஜக. வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்துக்கு ஆதரவான கட்சி என்று பார்க்கப்பட்ட பாஜக, தற்போது ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான கட்சி எனும் பிம்பம் உருவாகியிருப்பதைத் தவிர்ப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு பிம்பங்களுக்கும் இடையே இருந்த மெல்லிய கோடு, தற்போது மிகப் பெரிய பிளவாகக் காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜக, அதைத் தொடர்ந்து வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவித்தது. ஆனால், கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் பாஜக கொண்டுவந்திருக்கும் மாற்றங்களுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடிவரும் எதிர்க் கட்சிகளைச் சமாளிக்க முடியாமல் அக்கட்சி திணறுகிறது.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம், மத்திய அரசில் அக்கட்சியின் செயல்பாடுகளைச் சுயமதிப்பீடு செய்வதற்கும், அக்கட்சியின் வெற்றி, தோல்விகளுக்கான காரணங் களை அறிந்துகொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக இருந்தது. நரேந்திர மோடி அரசின் தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்நிலையில், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், புதிய வாக்குறுதிகளை அளிப்பது பலனளிக்காது.

இந்துத்துவத்தின் அடிப்படையிலான கலாச்சார, தேசியக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருக்கும் பாஜக தலைவர்களின் ஆதரவைத் தக்கவைப்பது; அதே சமயம் புதிய வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை பாஜக அரசு தரும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து வெற்றிபெற வைத்த புதிய வாக்காளர்களின் நம்பிக்கையைத் தக்கவைப்பது என்று இரண்டு பெரிய சவால்கள் பிரதமர் மோடிக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் இருக்கின்றன.

மத்திய அரசில் இடம்பெற்றிருக்கும் புதிய அமைச்சர்கள் சிலரும் உதிரி சக்திகளும் அவ்வப்போது வெளியிடும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் மதரீதியான கருத்துகள் உருவாக்கும் சர்ச்சைகளை, மோடியும் மூத்த அமைச்சர்களும் தலையிட்டுச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அத்துடன், தொழில்துறைக்குச் சாதகமாக நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் பாஜக அரசு கொண்டு வர முயற்சிக்கும் மாற்றங்கள், ஏழை மக்களையும் சிறு விவசாயிகளையும் ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டவையாகவே பார்க்கப்படுகின்றன.

மத்திய அரசுக்கும் கட்சிக்கும் இடையில் நெருக்கமான ஒருங் கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், கட்சி மற்றும் அரசு மீதான எதிர்மறைக் கண்ணோட்டங்களைச் சரிசெய்வது பெங்களூருவில் நடந்த பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. பொதுவாக, அரசின் செயல்பாடுகள்குறித்த மதிப்பீடு களையும் ஆலோசனைகளையும் வழங்குவதில் சம்பந்தப்பட்ட கட்சியின் அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், முக்கியப் பிரச்சினைகளில் மத்திய அரசைப் போலவே பாஜகவும் மக்களிடமிருந்து விலகியிருப்பதாகவே தோன்றுகிறது. இந்நிலையில், இவற்றுக்கான தீர்வை அதிரடியான பேச்சுகள் மூலம் தேட முடியாது. சிறப்பான செயல்பாடுதான் உண்மையான தீர்வாக இருக்கும்!​

SCROLL FOR NEXT