தலையங்கம்

கராச்சி அவர்களுக்குத் தொலைவில்லை!

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தூண் ஜகி உர் ரெஹ்மானை விடுவிக்க வேண்டும் என்று உத்தர விட்டிருக்கிறது லாகூர் உயர் நீதிமன்றம். கடந்த டிசம்பர் மாதமே, பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் ஒன்று அவருக்கு ஜாமீன் அளித்திருக்கும் நிலையில், இது அதிர்ச்சியையோ வியப்பையோ அளிக்கவில்லை.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில் லக்விக்கு முதலில் ஜாமீன் வழங்கப்பட்டபோது அதை எதிர்த்துப் பேசாமல் இருந்தது பாகிஸ்தான் அரசு. பின்பு, பெஷாவர் நகரில் ராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கொஞ்சம் வலித்ததாலோ என்னவோ, ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்டது. இப்போது மீண்டும் பழைய பாதை, அதே பயணம்.

லக்வி ஆதரவாளர்கள் யாருக்கும் இந்த முறை லக்விக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வியெல்லாம் எழவில்லை. அவர் எப்போது விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது. அரசின் அணுகுமுறை அப்படி. அரசுத் தரப்பு வழக்கறிஞர், லக்வியின் விடுதலைக்கு எதிராக முன்வைத்த கடுமையான வாதம் என்ன தெரியுமா? லக்வியை விடுவித்தால், ‘பொது அமைதி’க்குக் குந்தகம் விளையும் என்பதுதான். எப்பேர்ப்பட்ட வாதம்!

2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கர வாதிகள் நடத்திய மும்பைத் தாக்குதலை லக்விதான் இயக்கிக் கொண்டிருந்தார், இலக்குகளைச் சுட்டிக்காட்டி வழிகாட்டிக் கொண்டிருந்தார். லக்வியின் குற்றங்கள் தொடர்பான பல்வேறு ஆதாரங்களை இந்திய அரசு ஆவணபூர்வமாகவே பாகிஸ்தானுக்கு அளித்தது. அந்தப் பயங்கரவாதிகளில் ஒருவரும் உயிரோடு பிடிக்கப்பட்ட வருமான அஜ்மல் கசாப் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்தும் உரிய சான்றுகளை அளித்திருந்தது. மும்பை தாக்குதலுக்கு முன்னதாக மும்பை மாநகரை நோட்டமிட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் சையத் ஜிலானி, அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறிய முக்கியத் தகவல்களும் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் லக்விக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பாகிஸ்தான் அரசு வழக்கறிஞருக்கோ, அரசுக்கோ மனம் இல்லை.

தனக்கு எதிராகச் செயல்படும் தேஹ்ரிக் இ தலிபான் என்ற அமைப்புக்கு எதிராக ராணுவத்தை ஏவி கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் லக்வி மீது கடுமையான நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதி லிருந்தே அதன் இரட்டை வேடம் அம்பலமாகிறது. அது மட்டுமல்ல; அந்த அமைப்புகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதோடு, எப்போதாவது அவர்கள் சிக்க நேர்ந்தாலும், ‘நோகாமல் அடித்து’ அவர்களை அவர்கள் விருப்பப்படியே செயல்பட அனுமதிக்கிறது. எல்லாம் ராணுவத்துக்கும் ஜிகாதிகளுக்கும் இடையில் உள்ள எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவு.

நீண்ட காலத்துக்குப் பிறகு, பாகிஸ்தானில் மக்களாட்சி மலர்ந் திருக்கிறது. இனி பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அதிகம் இருக்காது; அமைதிப் பாதையை நோக்கி அது திரும்பும் என்று நம்பிய எல்லோரையும் மீண்டும் ஒரு முறை ஏமாளி ஆக்கியிருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராஜீயத் தொடர்புகள் உயர் நிலையில் ஏற்பட்ட பிறகும், இந்த விவகாரத்தில் நீதிக்குக் கிடைத்திருக்கும் தோல்வி அதைத்தான் சொல்கிறது. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வதை ஒரு கலையாக வளர்த்தெடுக்கும் நாட்டை நாம் என்னதான் செய்ய முடியும்?

SCROLL FOR NEXT