தலையங்கம்

சிரியாவின் பாதையில் போகிறதா யேமன்?

செய்திப்பிரிவு

உள்நாட்டுப் போர் எனும் சாபம் யேமன் நாட்டையும் விட்டுவைக்க வில்லை. யேமனின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே மோதல் முற்றிவிட்டதால் அங்கு வாழும் மக்களுக்குச் சொல்ல முடியாத துயரம் தொடங்கிவிட்டது.

வெவ்வேறு ஆயுதக் குழுக்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத யேமன் அரசு, உதவிக்கு அழைத்ததால் ‘வளைகுடா கூட்டுறவு கவுன்சில்’ என்ற அமைப்பில் உள்ள நாடுகள் தங்களுடைய ராணுவங்களுடன் உதவிக்குச் சென்றுள்ளன. இந்த நாடுகளுக்கு சவூதி அரேபியா தலைமை தாங்குகிறது. யேமனில் உள்ள ஹவுதி புரட்சிப் படைகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா வான் தாக்குதலை நடத்துகிறது. எகிப்து, ஜோர்டான் போன்ற அரபு நாடுகளும் பாகிஸ்தான், சூடான் ஆகியவையும் உதவிவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தத் தாக்குதலுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்க அரசு செய்துவருகிறது.

தன்னுடைய போட்டியாளரான ஈரானின் செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே சவூதி அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. தன்னுடைய நட்பு நாடான சவூதி அரேபியாவுக்காகவும் போட்டிக் குழுக்களின் தாக்குதலால் நசுக்கப் பட்டிருக்கும் யேமனின் இடைக்கால அரசுக்காகவும் அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது. யேமனின் இடைக்கால அரசுக்கு எதிராகத் தாக்குதலை நடத்திவரும் ஹவுதிகளுக்கு ஈரான் பண உதவியும் ஆயுத உதவியும் அளிப்பதாக சவூதி அரேபியாவும் அதன் தோழமை நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

ஹவுதிகள் ஜைதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். யேமனை நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர் அப்துல்லா சாலேவுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள்தான் அவர்கள். இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டபோது ஹவுதிகளுக்கு அதில் பிரதிநிதித்துவமோ, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவமோ தராமல் ஒதுக்கிவைக்கப்பட்டனர். அதனாலேயே அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராட ஆரம்பித்தார்கள்.

யேமன் தலைநகரம் சானா உட்பட நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஹவுதிகள் மட்டுமல்ல, அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் அரசுக்கு எதிராக, அன்சர் அல்-ஷாரியாவுடன் இணைந்து அல்-காய்தா நடத்தும் தாக்குதலும் யேமனுக்குத் தலைவலியாக உருவாகி யிருக்கிறது. ஹவுதிகளுக்கு எதிராக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நடத்தும் தாக்குதல், மறைமுகமாக அல்-காய்தாவுக்குத்தான் வலுவை அளிக்கும்.

யேமன் மக்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். இடைக்கால அரசின் செயல்படாத தன்மையால் மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படவில்லை, நாட்டிலும் அமைதி திரும்பவில்லை. பொருளாதாரமும் வலுவிழந்துகொண்டுவருகிறது. எனவே, அரசை எதிர்க்கும் குழுக்கள் வலுவடைந்துவருகின்றன. தெற்குப் பகுதியில் ஹவுதிகள் தங்களை வலுப்படுத்திக்கொண்டு தங்களுடைய செல்வாக்கை வலுப்படுத்தியிருந்தார்கள். அரசு அவர்களைச் சமமாக நடத்தியிருந்தால், பிரச்சினை இந்த அளவுக்குப் பூதாகாரமாக ஆகியிருக்காது. இப்போதோ சவூதி தலையிட்டுவிட்டதால் எதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

சிரியாவில் வெவ்வேறு குழுக்கள் தங்களுடைய பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு மற்ற குழுக்களுடன் சண்டையிட்டுவருவதைப் போல் யேமனின் நிலையும் ஆகிவிட்டது. அரபு வசந்தத்தின் மூலம் துளிர்த்த ஜனநாயக நம்பிக்கையை இந்த உள்நாட்டுப் போர் துடைத்தெறிந்துவிட்டதுதான் அவலம்!

SCROLL FOR NEXT