‘இந்தியாவில் எந்த வழக்கானாலும் விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை’ என்பது நீதித் துறை மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கும் இதற்கு விதிவிலக்கல்ல.
1992 டிசம்பர் 6-ம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடிப்பில் முக்கியப் பங்கு வகித்து, ஆயிரக் கணக்கான கரசேவகர்களை மசூதியின் மீது ஏவி விட்டவர்கள் மீது ‘குற்றம் புரியும் நோக்கத்தோடு சதி செய்தார்கள்’என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுப்பதுகுறித்து நீதித் துறை, 22 ஆண்டுகளாகியும் முடிவெடுக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது.
‘மசூதியை இடிக்கச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகுறித்து உங்களுடைய பதில் என்ன?’ என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, இமாசலப் பிரதேச ஆளுநர் கல்யாண் சிங் உள்ளிட்டோரிடம் உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக அவர்களை விசாரிக்க வேண்டும் என்று ஹாஜி மஹ்பூப் அகமது தாக்கல் செய்த புதிய மனுவையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. சிவசேனைத் தலைவர் மறைந்த பால் தாக்கரே, அத்வானி மற்றும் சிலரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 20-ல் வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தாமதம் ஏன் என்று கேட்டு சி.பி.ஐ-க்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
மத்தியில் பாஜக இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், போதிய நடவடிக்கைகளை சி.பி.ஐ. எடுக்காது என்று அச்சம் தெரிவித்து ஹாஜி மஹ்பூப் அகமது தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய அச்சம் தவறானது அல்ல; இந்த வழக்கின் துணைக் குற்றப்பத்திரிகையை 2003-ல் தாக்கல் செய்தபோது, இந்தியத் தண்டனையியல் சட்டத்தின் 120 (பி) (சதி செய்தல்) பிரிவை அதில் சி.பி.ஐ. சேர்க்கவில்லை. அப்போது பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தது. மசூதியை இடிக்கத் தூண்டியவர்கள் மீதான வழக்கை லக்னோ உயர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உத்திரப் பிரதேசத்தின் அறிவிப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. அந்த அறிவிப்பில் இருந்த குறையைச் சரிசெய்து, புதிய அறிவிப்பை வெளியிட உத்தரப் பிரதேச அரசு தவறியது. சி.பி.ஐ., அதைப் பயன்படுத்திக்கொண்டு ‘கலவரம் செய்தல்’, ‘இரு வெவ்வேறு மதங்களுக்கு இடையில் பகைமையைத் தூண்டிவிடுதல்’, ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுதல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் மட்டும் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்தது. இதனால், குற்றம்சாட்டப்பட்ட பெருந்தலைகள் எளிதாகத் தப்பித்துக்கொள்ள நீதி விசாரணை என்பது கேலிக்கூத்தானது.
இந்திய நீதி விசாரணை அமைப்புகள் இப்படியே தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்க முடியாது. ஹஷிம்புரா வழக்கு, குஜராத் கலவர வழக்கு, பாபர் மசூதி வழக்கு என்று தொடர்ச்சியாக இந்திய நீதித் துறை சந்தித்துவரும் பின்னடைவு நம் தேசத்தின் சிறுபான்மையினரிடையே மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரின் எண்ணிக்கை பாகிஸ்தானின் மக்கள்தொகையைவிட அதிகம். இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் தொடர்ந்து அவநம்பிக்கையிலேயே வைத்திருந்து, எந்த வளர்ச்சியை நோக்கிச் செல்லப்போகிறோம் நாம்?