தலையங்கம்

வாழ்த்துகள் மோடி!

செய்திப்பிரிவு

இந்தியா முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்குத் தனிப் பெரும்பான்மையைத் தந்து, நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தை ஆள அனுப்பியிருக்கிறது. கடந்த அரசின் மீதான வெறும் கோபமும் ஏமாற்றங்களும் மட்டுமே இதற்கான காரணங்கள் அல்ல. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசாங்கங்கள் கொஞ்சம்கொஞ்சமாக உருவாக்கிய இந்த ஊழல் கட்டமைப்பு இன்றைக்குத் தங்களின் வாழ்க்கையையே அழுத்திக்கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அன்றாட வாழ்வின் பிழைப்புக்கான சுமைகளிலிருந்து கொஞ்சமேனும் அவர்கள் விடுபட நினைக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்; வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் மாற்றம் - வளர்ச்சி என்கிற வார்த்தைகளைக் கோஷமாக்கிய மோடியை அவர்கள் தேர்ந் தெடுத்திருக்கிறார்கள்.

ஒருவகையில், மோடிக்கு முன்னுள்ள மகத்தான வாய்ப்பு இதுதான். அதாவது, அவர் முன்னிறுத்தியிருக்கும் வளர்ச்சி கோஷம். இன்னொரு வகையில், அவருக்குக் கண்ணுக்குத் தெரியாத எதிரியும் அதுதான். எதிர்பார்ப்புகள் உண்மையில் பெரிய சவால்கள். ஆக, மோடிக்குக் கடுமையான வேலைகள் காத்திருக்கின்றன. அந்த வேலைகளை எதிர் கொள்ளும் அளவுக்கு அவர் கடுமையான உழைப்பாளி என்பதை உணர்த்த அவருடைய தேர்தல் பிரச்சாரங்கள் போதுமானவையாக இருந்தன. ஆனால், அவர் யாருக்காக, எதற்காக உழைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். முக்கியமாக, செய்வதைக் காட்டிலும் செய்யக் கூடாதவற்றில் அவருக்குத் தெளிவுகள் அவசியம்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிக அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கும் தேர்தல் இது. கிட்டத்தட்ட 66.4% மக்கள் வாக்களித் திருக்கிறார்கள். இப்படி வாக்களித்தவர்களில் 31% பேர் மோடியைத் தங்கள் தேர்வாக நினைத்திருக்கும் வேளையில், இன்னமும் 69% பேர் அவரைத் தங்கள் தேர்வாக நினைக்கவில்லை என்பதை அவர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுடைய நம்பிக்கைகளையும் பெறும் வகையில் அவருடைய ஆட்சி அமைய வேண்டும் என்பதை அவர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியத் தேர்தல் வரலாற்றில், இந்திரா காந்திக்குப் பிறகு, ஜனநாயகத் துக்கான அச்சுறுத்தலாக ஒரு வேட்பாளர் சித்தரிக்கப்பட்டது இப்போது தான். குஜராத் கலவர அனுபவங்கள் சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. பள்ளிக்கூடப் பாடத் திட்டத்தில் தொடங்கி வரலாற்று நூல்கள் வரை எல்லாவற்றிலும் சங்கப் பரிவாரங்கள் கைவைக்கலாம் என்று அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் அஞ்சுகிறார்கள். இன்னும், பக்கத்துக்கு நாட்டுடன் போர் தொடுக்கப்படலாம், காஷ்மீரில் ‘மீள்குடியேற்றம்’ நடத்தப்படலாம், மாவோயிஸ்ட்டுகளுடன் உள்நாட்டுப் போருக்கு உத்தரவிடப்படலாம், பெருநிறுவனங்களுக்குத் தேசம் பகிர்ந்தளிக்கப்படலாம், இன்னொரு நெருக்கடிநிலைப் பிரகடனம் வெளியிடப்படலாம் என்று ஏகப்பட்ட அச்சங்கள்... இதுவரை இந்தியாவின் பிரதமர்களாகப் பொறுப்பேற்ற எவருக்கும் இல்லாத நெருக்கடிகள் இவை. அனைத்துத் தரப்பினரின் நல்லெண்ணங்களையும் வென்றாக வேண்டிய கடமை மோடிக்கு முன் இருக்கிறது.

பிரதமராகப் பதவியேற்கும் முன்பே, தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாட்டு ஆட்சித் தலைவர்களின் அழைத்ததன் மூலம் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நல்லெண்ணங்களை விதைத்திருக் கிறார் மோடி. வரவேற்கத் தக்க, முதிர்ச்சியான, நேர்மறை எண்ணங் களை விதைக்கும் நல்ல முடிவு இது. இந்த ஆரம்பப் புள்ளி நிலைக்கவும் நீடிக்கவுமே இன்றைய இந்தியா விரும்புகிறது. உங்களிடம் இந்தியா நிறைய எதிர்பார்க்கிறது... நல்லது செய்யுங்கள்... வாழ்த்துகள் மோடி!

SCROLL FOR NEXT