தன்னுடைய அணியினரின் வாய்களைக் கட்டிவைக்கவே பிரதமர் மோடி அரசாங்கத்தில் ஒரு துறையை உருவாக்க வேண்டும்போல் இருக்கிறது. இந்த முறை வெறுப்பு விதைகளை எல்லை தாண்டி அனுப்பிவைத்திருப்பவர் சர்ச்சைகளுக்குப் பேர்போன முன்னாள் தரைப் படைத் தளபதியும் வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான வி.கே.சிங். கொடுமை என்னவென்றால், அரசு நல்லெண்ண நடவடிக்கையாக அவரைப் பங்கேற்க அனுப்பிவைத்த விழாவையே எதிர்மறையான களமாக அவர் மாற்றியிருக்கிறார்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் திங்கள்கிழமை நடந்த பாகிஸ்தான் தேசிய தின விழாவில் வி.கே.சிங்கைப் பங்கேற்க அரசு அனுப்பிவைத்தது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், சையது அலி ஷா கிலானி, மிர்வாயிஸ் உமர் பரூக் போன்ற காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் களும் அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 10 நிமிடங்களே அங்கு இருந்த வி.கே.சிங், நிகழ்ச்சியிலிருந்து பாதியில் திரும்பி வந்துவிட்டார். பின்னர், ட்விட்டரில் இதுபற்றி கருத்து பதிந்த அவர், தான் விழாவில் பங்கேற்க நேர்ந்தது அருவருப்பு தந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் தின விழாவில் பிரிவினைவாதத் தலைவர்கள் பங்கேற்பது புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைமுறையில் உள்ளதுதான். இதை வி.கே.சிங்கே கூறியிருக்கிறார். தவிர, இந்த விழாவில் அவர் அழைக்கப்பட்டபோதே, விழாவில் யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் எனும் விவரமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இந்தியா பாகிஸ்தான் உறவில் ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கும் விதமாகவே அரசு அவரை அனுப்பிவைத்திருந்தது. பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிட வேண்டியது. இத்தகைய சூழலில், யாரை அவமானப்படுத்துவதாக நினைத்து இத்தகைய கருத்துகளை சிங் வெளியிட்டார் என்று தெரியவில்லை.
அரசுப் பிரதிநிதிகளுக்கு நாவடக்கம் அவசியம். அதிலும், வெளியுறவுத் துறையைப் பொறுத்தவரையில் அமைச்சரோ அதிகாரிகளோ ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்தே பயன்படுத்த வேண்டும். சிங் தன்னுடைய பதவியின் மாண்பையோ, தன்னுடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் விளைவு களையோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன. ஊடகங்களும் விமர்சித்திருக்கின்றன. ஆனால், சிங் தன்னுடைய தவறைச் சரிசெய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை. இந்த விவகாரம் தொடர்பாக யாருக்கும் தான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருக்கும் சிங், ஊடகங்கள் மீது பாயத் தொடங்கியிருக்கிறார். “இந்த விவகாரத்தைத் திசை திருப்பும் விதத்தில் நடந்துகொள்ளும் சில ஊடகங்களைப் பார்க்கும்போதுதான் அருவருப்பாக இருக்கிறது” என்பது இந்த சர்ச்சை தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் சமீபத்திய பதிவு.
தனிப்பட்ட ஒரு மனிதருக்குரிய எல்லைகளும் ஒரு தேசத்தின் பிரதிநிதி களுக்குரிய எல்லைகளும் ஒன்றல்ல. சிங் தரைப்படைத் தளபதியாக இருந்தபோது வெளியான கடிதங்களையும், பிற்காலத்தில் அவர் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டிகளையும் நாடு இன்னும் மறந்துவிடவில்லை. அரசில் பொறுப்பேற்று மாதங்கள் பல ஆகியும் இன்னமும் அவர் தன்னை தன்னுடைய பதவிக்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே அவருடைய தொடர் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. இப்படியான ‘வாய்கள்’ தொடர்ந்து பேச அனுமதிக்கப்படுவது அரசை இன்றைக்கு தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்; நாளைக்கு அதுவே பெரிய விலையைக் கேட்கும்!