தலையங்கம்

ஆடம்பரம் அல்ல, அடிப்படைத் தேவை

செய்திப்பிரிவு

பள்ளிக்கூட அடித்தளக் கட்டமைப்புகளின் ஏற்றத்தாழ்வுகளை விளக்க, வெவ்வேறு பள்ளிகளுக்கு இடையிலான வசதிகளை ஒப்பிட்டாலே போதும். ஆயிரக் கணக்கான அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, விளையாட்டுத் திடல், நூலகம், சோதனைச்சாலை, வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் தேவையான அளவு இல்லாத அதே வேளையில், குளிர்சாதன வகுப்பறைகளும், மாணவர் களுக்கான பொது அறைகளும் நிறைந்த தனியார் பள்ளிகளும் இதே நாட்டில்தான் இருக்கின்றன.

எல்லா பள்ளிகளிலும் இன்னும் 6 மாதங்களுக்குள் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்று ஆந்திர மாநிலத்துக்கு 2012 அக்டோபரில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதற்கு முந்தைய ஆண்டும் அப்படித்தான் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டும் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இன்று வரையிலும் பெரிய முன்னேற்றம் என்று எதுவும் இல்லை. கழிப்பறைகள், மாணவிகளுக்குப் பாதுகாப்பாகவும் தண்ணீர் வசதியுடன் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பல பள்ளிகளில் கழிப்பறைகள் இருப்பதில்லை. நாலு பக்கம் மறைப்பு, மேலே ஒரு கூரை, ஒப்புக்கு ஒரு கதவு. இதுதான் பல பள்ளிகளில் கழிப்பறைகளின் நிலை.

பணப் பற்றாக்குறையோ, கழிப்பறைகள் அமைப்பதற்கான சாதனங்கள் கிடைக்காததோ பிரச்சினை இல்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அதிலும் குறிப்பாக மாணவிகள் கழிப் பறையைப் பயன்படுத்த முடியாததால் நீண்ட நேரம் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொள்வதால் ஏற்படும் கெடுதல்களை இதுவரை யாரும் கணக்கெடுத்ததோ, பதிவு செய்ததோ கிடையாது. தண்ணீர் வசதியின்றி ஓரிரு கழிப்பறைகளை மட்டும் நூற்றுக் கணக் கானவர்கள் பகிர்ந்துகொள்ள நேர்வதால், மாணவர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றும் அப்படித்தான் அலட்சியப்படுத்தப்படுகிறது.

குடிநீர், சுகாதார அமைச்சகம் 40 மாணவிகளுக்கு ஒரு கழிப்பறை, 80 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற வீதத்தில் கட்டப்பட வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான ‘யுனிசெஃப்’ 25 மாணவிகளுக்கு ஒரு கழிப்பறையும் 80 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடமும், ஒரு கழிப்பறையும் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீர்படுத்தினால் ஒட்டுமொத்த நாட்டுக்கான சுகாதார வசதிகளில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்ததாகிவிடும். பள்ளிகளில் செய்துதரும் இந்த வசதியும், ஏற்படுத்தித் தரும் பழக்கமும் சமுதாயத்துக்கே ஒரு பாடமாக, பின்பற்ற வேண்டிய உதாரணமாக மாறிவிடும்.

சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தில் 284 பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் இன்னும் 12-ல் மட்டுமே கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும். புதிதாகக் கழிப்பிடங்கள் கட்டப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; இதற்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக் கழிப்பிடங்களின் நிலை என்னவென்று பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. ஆகவே, கழிப்பிடங்களைக் கட்டுவதைப் போலவே கழிப்பிடப் பராமரிப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

குடிமக்களுக்கு - அதிலும் மாணவ, மாணவியருக்கு - கழிப்பறை என்பது ஆடம்பரமான பரிசு அல்ல, அத்தியாவசியத் தேவை. தனது குடிமக்கள் கண்ணியமான சூழலில் வாழ்வதை அரசு விரும்புமானால் அது கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் கழிப்பிட வசதியாகத்தான் இருக்க முடியும்.

SCROLL FOR NEXT