தலையங்கம்

கருப்புப் பணத்தை நிஜமாகவே ஒழித்துவிட முடியுமா?

செய்திப்பிரிவு

கருப்புப் பண விவகாரத்தில் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, தற்போது சில விளக்கங்களை அளித்திருக்கிறது மத்திய அரசு. கடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது கருப்புப் பண விவகாரத்தைப் பிரதானமாகக் கையில் எடுத்தது பாஜக. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குக் கொண்டுவருவோம், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்வோம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தலா 15 லட்ச ரூபாய் வரை வழங்கும் அளவுக்குக் கருப்புப் பணம் இருக்கிறது” என்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி முதற்கொண்டு அனைவரும் பேசினார்கள்.

கருப்புப் பணம் எவ்வளவு என்பதையெல்லாம் இன்றுவரை யாராலும் துல்லியமாகக் கூற முடியவில்லை. வெளிநாடுகளில் மட்டுமல்ல, உள்நாட்டிலேயே கருப்புப் பணம் கைமாறிக்கொண்டுதான் இருக்கிறது. வர்த்தகர்கள், தொழிலதிபர்களுடன் உறவாடும் பாஜகவினருக்கு இதன் தோற்றம், வளர்ச்சி, விநியோகம்குறித்து ஏதும் தெரியாமல் இருந்திருக்க முடியாது. மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் இந்த வாக்குறுதியையும் சேர்த்து நம்பி அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால், அரசியல் கட்சிகள் ‘கருப்புப் பண’எதிர்ப்பு கோஷத்தை முன்னெடுத்தது மக்கள் ஆதரவை ஈர்ப்பதற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையில் அல்ல என்பதுதான் வெளிப்படை.

கருப்புப் பணத்தைப் பதுக்குகிறவர்கள் அப்பாவிகளோ செல்வாக்கற்றவர்களோ அல்ல. அவர்கள் எப்போதோ அவற்றை ‘உரிய இடத்துக்கு’ நகர்த்தியிருப்பார்கள். மறைக்கத் தெரியாத சிலர்தான் இனி சிக்குவார்கள். கடந்த காலக் கருப்புப் பணத்தைக் கைப்பற்ற முடிகிறதோ இல்லையோ, வருங்காலத்திலாவது கருப்புப் பணம் குவியாமல் தடுக்க உளப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் கருப்புப் பணம், கள்ளச்சந்தை, உற்பத்திச் செலவையும் தாண்டி மிகையான விலையில் விற்பது போன்றவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் துணையாக இருப்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டுமல்ல, அரசு அளிக்கும் சலுகைகள், விதிவிலக்குகள் மற்றும் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் போன்றவைதான்.

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கருப்புப் பணத்தைத் தாங்கள் எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்று உரையில் ஓரளவுக்குக் கோடி காட்டியுள்ளார். வெளிநாடுகளில் சம்பாதித்ததையோ, சேர்த்து வைத்ததையோ இந்திய அரசுக்குத் தெரிவிக்காமல் இருந்தால், வரி செலுத்தாமல் ஏய்த்தால் அபராதம், 10 ஆண்டுகள் வரையில் சிறைவாசம் ஆகியவற்றுடன் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். இப்படி முறைகேடாகப் பணம் அல்லது சொத்து சேர்த்தவர்கள் தீர்ப்பாயங்களை அணுகித் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறும் முயற்சியும் சட்டரீதியாகவே தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இவையெல்லாமே நோய்க்கு மருந்து தேடும் அல்லது தேடுவதாகப் பாவனை செய்யும் முயற்சிகள்தான். இப்போதுள்ள நிர்வாக அமைப்பும் பணப்பரிமாற்ற நடைமுறைகளும்தான் கருப்புப் பணம் திரள்வதற்கும் ஓரிடத்தில் மறைவதற்கும் உதவியாக இருக்கின்றன. அதில் மாற்றம் ஏற்படாதவரை கருப்புப் பண ஒழிப்புக்காக எவ்வளவு சட்டம் கொண்டுவந்தாலும் சாத்தியமே இல்லை.

SCROLL FOR NEXT