தலையங்கம்

பொருளாதாரம் வேகம் பெறுமா?

செய்திப்பிரிவு

இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையை அறிவிப்பதற்கான உரிய நாளுக்கு முன்னதாகவே, ‘ரெபோ ரேட்’ என்று அழைக்கப்படும் வட்டி வீதத்தை 0.25% குறைத்திருக்கிறார் கவர்னர் ரகுராம் ராஜன். இந்த ஆண்டில் இப்படி வட்டி குறைக்கப்படுவது இது இரண்டாவது முறை.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டி வீதம்தான் ‘ரெபோ ரேட்’. இந்த வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தால், வங்கிகளும் தங்களிடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய வட்டியைக் குறைக்க முடியும். அதனால் மத்தியதர வர்க்கத்தினர் ஊக்குவிப்பு பெற்று வீடு அல்லது வாகனங்கள் வாங்க முற்படுவார்கள். கட்டுமானத் தொழில் நிறுவனங்களையும், மோட்டார் வாகனத் துறையையும், நுகர்பொருள் உற்பத்தித் துறைகளையும் இது ஊக்குவிக்கும்.

பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும் தற்போதைய நிலை 6 மாதங்களுக்குப் பிறகும் தொடரும் என்று கூறிவிட முடியாது. பணவீக்க வீதம் இப்போது 5%-க்கும் கீழே இருக்கிறது. இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் விலைவாசி உயர்வதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. ரயில்வே நிதிநிலை அறிக்கையில் பயணக் கட்டணம் உயர்த்தப்படாவிட்டாலும் நிலக்கரி, உருக்கு, உணவு தானியங்கள், பருப்பு வகைகள் மீதான சரக்குக் கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் விலைவாசி உயரத் தொடங்கும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாகப் போக்குவரத்துச் செலவும் உயரப்போகிறது. சில நாட்களுக்கு முன்னால் சில மாநிலங்களில் பெய்த திடீர் கனமழையால், விளைந்த பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விளைபொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், 2015-16ல் விலைவாசி உயர்வை 6%-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு தோல்வியடையலாம்.

இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி வீதக் குறைப்பின் பலனை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தருமா என்ற கேள்வியும் எழுகிறது. வாராக் கடன் சுமையால் எல்லா வங்கிகளும் தத்தளிக்கின்றன. திவால் அறிவிப்புச் சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அந்த மாற்றம் வந்து, அதற்கான நடைமுறை எளிதானதாக அமைந்தால்தான் வாராக் கடன் சுமையை வங்கிகள் குறைத்துக்கொள்ள முடியும். வாராக் கடன் சுமை அழுத்துகிறது என்பதற்காக சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வங்கிகள் புறக்கணித்துவிடக் கூடாது. இதுவரை வங்கிகளால் கவனிக்கப்படாதவர்கள், கவனிக்கப்பட வேண்டும் என்ற அரசின் முனைப்பு வங்கிகளுக்கும் தொழில்வளர்ச்சிக்கும் நன்மையையே தரும். பழைய தொழில் நிறுவனங்களுக்குப் புத்துயிர் ஊட்டவும் திருத்தி அமைக்கவும் நிதியுதவி செய்வதுடன், வருமானம் கிடைக்கும் துறைகளுக்கும் கடன் வழங்க வேண்டும். எளிமையான நடைமுறைகள், வெளிப்படையான நிர்வாகம், நம்பகமான சேவை, குறைந்த வட்டி ஆகியவற்றுடன் வங்கிகள் புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) சரிபாதி அளவுக்குக் கடன் நிலுவைகளின் மொத்த மதிப்பு இருக்கிறது; இந்நிலையில் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை மட்டும் போதாது. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளின் மீது கவனமும் நிறுவனங்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்பும் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும்.

SCROLL FOR NEXT