கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற ஜாட் சமூகத்தவரை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) பட்டியலில் சேர்த்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
“சில சமூகங்கள் தாங்களாகவே தங்களைப் பிற்படுத்தப்பட்ட சமூகங் களாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கும் அந்தப் பட்டியலின் அடிப்படை யில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரினால், அதை மத்திய அரசு ஏற்பது சரியல்ல. 9 மாநிலங்களைச் சேர்ந்த ஜாட் இனத்தவர்கள் ராணுவம், மத்திய, மாநில அரசு அலு வலகங்கள் போன்றவற்றில் கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பெற்று, அந்த மாநிலங்களில் உள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விட மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால் அரசுக்கு நெருக்குதல் தந்து தங்களையும் பட்டியலில் சேர்க்க வைத்துவிட்டனர். பிற்படுத்தப்பட்டவர்களாக ஒரு சமூகத்தை அறிவிக்கும்போது, அரசியல் கண்ணோட்டத்தில் அரசுகள் செயல்படக் கூடாது. பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது இப்போது எந்த வடிவில் உருவாகிறது என்பதையும் அரசு கவனமாக ஆராய வேண்டும். கடந்த காலத் தவறுகளோ, பட்டியலில் தவறாகச் சேர்க்கப்பட்ட முன்னுதாரணமோ மேலும் சில இனங்களைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள முன்னுதாரணங்களாகிவிடாது. அதே வேளையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பட்டியலில் அரசு மாற்றங்களைச் செய்யவே கூடாது என்றும் நீதிமன்றம் கருதவில்லை. மாற்றுப் பாலினர் போன்ற புதிய சமூகக் குழுக்கள் உருவாகிவருவதையும் சமூகரீதியாக அவை பின்தங்கியிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று பெஞ்ச் கூறியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக யாரைச் சேர்த்துக்கொள்ளலாம், யாரைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதற்கான வழிகாட்டுக் குறிப்புகளைப் போல தீர்ப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அரசியல்ரீதியாகச் செல்வாக்குள்ளவர்கள் என்பதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாது என்று பெஞ்ச் வலியுறுத்துகிறது. ஆண்டாண்டு காலமாகச் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டதாலேயே பல சமூகங்கள் பின்தங்கியிருப்பதை ஏற்கும் பெஞ்ச், அது மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகமாகப் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியாகிவிடாது என்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காண்பதற்குப் புதிய வழிமுறைகள், புதிய நடைமுறைகள், புதிய இலக்கணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது.
2014 மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஜாட் சமூகத் தவரின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆட்சி செய்த ஐமுகூ அரசு அந்தச் சமூகத்தைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க முடிவுசெய்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன், அவ்வாறு சேர்க்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியது. பின்தங்கிய சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அவசியம்தான். அதே வேளையில் ராணுவம், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் ஏற்கெனவே நல்ல பிரதிநிதித்துவம் பெற்றுள்ள, பொருளாதாரரீதியாகப் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைவிட வலுவாக உள்ள ஒரு சாதியைச் சேர்ப்பதால், ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இன்னமும் வளர்ச்சி பெற முடியாமல் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடங்களைக் குறுக்குவதாக ஆகிவிடாதா என்பதையும் அரசு சிந்திக்க வேண்டும்.
இப்போது உருவாகிவரும் புதிய சமூக, பொருளாதாரச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை அரசு ஏற்க வேண்டும்.