தலையங்கம்

பயங்கரவாதத்தின் கரங்கள் நீள்கின்றன!

செய்திப்பிரிவு

பயங்கரவாதத்துக்கென்று எந்த மதமும் இல்லை என்பதுபோல் எந்த எல்லையும் இல்லை என்பதும் உண்மையே. இராக், சிரியா என்ற அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ஜப்பானை இப்போது அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த கென்ஜி கோட்டோ, ஹருணா யுகாவா என்ற இரண்டு பத்திரிகையாளர்களைச் சமீபத்தில் படுகொலை செய்ததோடல்லாமல், எதிர்காலத்தில் ஜப்பான் ராணுவத்தைக் குறிவைத்துத் தாக்குவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது.

பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான ஜப்பானிய அரசுக்கு இது புதிய சவால். இந்தப் படுகொலைச் சம்பவங்களால் ஒட்டுமொத்த ஜப்பானியர்களின் எண்ணமும் அந்நாட்டு அரசின் வெளியுறவுக் கொள்கையும் புதிய திசையில் திரும்பும் நிலையில் இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் அடங்கிவிட்டது. 1946-ல் இதற்காக அந்நாட்டு அரசியல் சட்டத்தில் முக்கியத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இனி, போர் செய்வதில்லை என்று தீர்மானித்துக்கொண்ட ஜப்பான், பிற நாடுகளின் மீது படையெடுத்துப் போரிடும் அளவுக்குத் தன் ராணுவத்தை வலிமை கொண்டதாக ஆக்கவில்லை.

சர்வதேச அளவில் மோதல்கள் நடந்தாலும், எந்த ஒரு நாடாவது முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்குவதே ஜப்பானின் இயல்பு. வல்லரசுக் கனவுகளில் பல நாடுகள் இருக்கும்போது, ராணுவரீதியாக வல்லரசுகளில் ஒன்றாக ஆகும் வாய்ப்பு இருந்தும்கூட, அதை ஜப்பான் தவிர்த்துவந்தது புவியரசியல் களத்தில் வியப்பளிக்கும் விஷயம். அதனுடைய ராணுவ பலமும் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதற்காகவும், அமைதியை நிலைநாட்டவும், தற்காப்புக்காகவும் மட்டுமே திருத்தியமைக்கப்பட்டது.

எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் ஜப்பான் தலையிடுவதே இல்லை. அப்படியிருக்க, ஜப்பானை ஏன் ஐ.எஸ். இலக்காகத் தேர்ந் தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானின் வெளியுறவுக் கொள்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. தேசியவாதியும் பழமைவாதத்தை ஆதரிப்பவருமான ஷின்சோ அபே 2012-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலே ஜப்பானின் அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சித்துவருகிறார். ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கிறார். ஆயுத ஏற்றுமதி மீதான தடையை நீக்கியிருக் கிறார். ஜப்பான் ராணுவத்தின் திறனைக் கூட்டிவருகிறார்.

இயற்கை வளங்கள் குறைவாக இருப்பதால், தனக்குத் தேவைப்படும் கச்சா பெட்ரோலிய எண்ணெயை மத்தியக் கிழக்கு நாடுகளிடம் இருந்துதான் ஜப்பான் இறக்குமதி செய்துகொள்கிறது. மத்தியக் கிழக்கில் அமைதி ஏற்பட்டால்தான் ஜப்பானுக்கும் பொருளாதாரரீதியாக நல்லது. ஐ.எஸ். அமைப்பை எதிர்த்துப் போரிடும் நாடுகளுக்கு ராணுவமல்லாத தேவைகளுக்காகச் சுமார் 1,200 கோடி ரூபாய் உதவியை ஷிபே அறிவித்தார். ஐ.எஸ். நடவடிக்கையால் இராக், சிரியா நாடுகளிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் அகதிகளுக்கு உதவிகள் அளிக்கவும் தயார் என்றார். அங்கே தொடங்கியது வினை!

ஜப்பானைக் குறி வைத்ததாகக் கருதி, அந்நாட்டின் இரு பத்திரிகையாளர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்றிருப்பது ஜப்பானியர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஜப்பானை மீண்டும் அதன் பழைய போர் நாட்களை நோக்கி நகர்த்துகிறார்கள் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் பலரும். ஜப்பான் நிதானமாகக் கடக்க வேண்டிய காலம் இது. ஒரு அரசின் செயல்பாடுகள் ஒருபோதும் ஒரு பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளால் உந்தப்படக் கூடாது.

SCROLL FOR NEXT