தலையங்கம்

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் தமிழர்கள் விவகாரத்துக்கு!

செய்திப்பிரிவு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சமீபத்திய இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், நம்முடைய உறவுப் பயணம் புதிய திசையில் கூடுதல் வேகத்தையும்கூடப் பெற்றிருக்கிறது என்றும் சொல்லலாம்.

புதிதாக அதிபர் பதவியேற்ற சிறிசேனா, தன்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். வழக்க மான சம்பிரதாய சந்திப்பாக அல்லாமல், 4 முக்கியத் துறைகளில் பயனுள்ள வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது, சீனத்துக்கு நெருக்கமாகச் சென்றுகொண்டிருந்த இலங்கையின் வெளியுறவுக் கொள்கையிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட, சமநிலை பேண முயற்சிக்கும் போக்காக நாம் இதைக் கருதலாம்.

இலங்கையின் தொழில், விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளுக்கு இந்தியாவின் பங்களிப்பு கடந்த காலங்களில் கணிசமாக இருந்திருக் கிறது. இப்போதும் பெருமளவில் உதவக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. இதையொட்டியே ஆக்கப் பணிக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப் பட்டபோதும் அது செயல்பாட்டுக்கு வந்தபோதும் அதனால் இலங் கைக்குப் பாதிப்பு நேரிடும் என்று அச்சம் தெரிவித்தது மகிந்த ராஜபக்ச அரசு. புதிய அரசோ அத்தகைய அணுசக்தியை ஆக்கப் பணிக்குப் பயன் படுத்துவதில் இலங்கைக்கும் உதவ வேண்டும் என்று இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இது வரவேற்கத் தக்க மாறுதல்.

அணுசக்தி தொடர்பான அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளவும், அணுசக்தியை அமைதியான பணிகளுக்குப் பயன்படுத்த இலங்கையர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிசெய்கிறது. மாலத்தீவையும் உள்ளடக்கிய ராணுவ, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இன்னொரு ஒப்பந்தம் வழிசெய்கிறது. இலங்கையின் தொழில்துறை, வேளாண்துறை தேவைகள் தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டுள்ளன. இலங்கையுடன் கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் போக்குவரத்தைப் பெருக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இரு நாடுகளின் கடலோடிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாட்டு கடலோடிகள் மத்தியில் முன்பு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நல்ல விஷயங்கள்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது. ஆனால், இதுகுறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்திய - இலங்கை உறவுச் சங்கிலியின் மிக முக்கியமான - இணைப்புக் கண்ணி இலங்கைத் தமிழர்கள். அவர்களுடைய அமைதியான வாழ்க்கைச் சூழல்தான் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் மேம்படுத்தும். தவிர, இலங்கையின் எதிர்கால வளர்ச்சியும் தமிழர்களின் கைகோத்த பயணத்திலேயே இருக்கிறது. தமிழர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வும் சமத்துவமான கண்ணிய வாழ்வும் உறுதிசெய்யப்பட, இந்தியா இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேச வேண்டும்; பிரதமர் மோடியின் அடுத்த மாத இலங்கைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்படும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை காரியமாற்ற வேண்டும்!

SCROLL FOR NEXT