எச்சரிக்கை, அலட்சியம் எல்லாவற்றையும் கடந்து பூதாகரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது பன்றிக் காய்ச்சல். இந்தியாவில் இதுவரையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; சுமார் 15,000-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்பட்டுவருகின்றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளின் ‘எபோலா’ அளவுக்கு இது தீவிரமான காய்ச்சல் அல்ல என்றாலும், குளிர்காலம் இன்னும் சில மாநிலங்களில் நீடிப்பதால் மக்களிடையே பீதி ஏற்பட்டிருக்கிறது. குளிர்காலம் போனதும் காய்ச்சலின் தீவிரம் குறைந்துவிடும் என்பதற்காக அரசு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க முடியாது. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு மிகமிக அதிகம். டெல்லியில் இந்தக் காய்ச்சல் 2,000-க்கும் மேற்பட்டவர்களைப் பீடித்திருந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தக்க நேரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் இது சாத்தியமானது.
இந்த நிலையிலும்கூடப் போதிய அளவு தடுப்பு மருந்தை வாங்குவதில் அரசு அக்கறை செலுத்தவில்லை என்றால், யாரைத்தான் நோவது? ஊசி மருந்து ஒரு குப்பி ரூ.100 என்ற விலையிலும் தயாராகிறது. 3 இந்திய நிறுவனங்கள்தான் இந்த மருந்தைத் தயாரிக்கின்றன. அரசு சற்று தாமதித்து உத்தரவைப் பிறப்பித்ததால், ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதே மருந்தை ரூ.450 முதல் ரூ.1,000 வரை விலை வைத்து விற்கிறது. நிலைமை மேலும் மோசமாகும் என்றால், உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை இந்திய அரசு நாட வேண்டும். டாமிஃப்ளூ அல்லது ரெலன்சா என்ற மாத்திரைகளை இந்திய நிறுவனங்கள் மூலம் தயாரிக்க, ‘கட்டாய உரிம அளிப்பு’ மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மையின்மையும் நகரமைப்புகளும்தான் இது போன்ற நோய்களுக்கு இந்தியாவில் களம் அமைத்துக்கொடுக்கின்றன. ஆனால், வறுமையை ஒழிக்காமல் இந்தியாவைத் தூய்மைப்படுத்திவிட முடியாது என்பதை அரசு உணரவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை, மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) வெறும் 1% ஆகத்தான் இருக்கிறது. குறைந்தபட்சம் 2% ஆகவாவது உயர்த்தினால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும்.
வெறும் மருந்து மாத்திரைகளால் மட்டுமே நோயைத் தடுத்துவிட முடியாது, மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவும் கிடைக்க வேண்டும். சுவாச நோய்கள் உள்ளோரின் நிலைமைதான் ஆபத்து. எனவே, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கவும் வராமல் இருக்கவும் ஒருங்கிணைந்த சுகாதார நடவடிக்கைகள் அவசியம். ஊட்டச்சத்து, பொதுச் சுகாதாரம், நோய்கள் குறித்த விழிப்புணர்வு, நோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள், வந்துவிட்டால் சிகிச்சை தர தனி மருத்துவப் பிரிவுகள், பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினர் என்று அனைத்தும் அவசியம். நகரங்களில் வீதிகளும் சாக்கடைகளும் பழுதாகாத வண்ணம் அமைக்கப்பட வேண்டும். மக்கள் குடியிருக்கும் இடங்கள் தூய்மையாக, நோய்க்கிருமிகள் அண்ட முடியாதபடிக்கு இருக்க வேண்டும்.
வறுமை, மக்கள்தொகை அடர்த்தி ஆகிய பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நைஜீரியா போன்ற நாடுகள் எபோலாவை எதிர்கொண்டு வெற்றி கொண்ட விதம் இந்தியாவுக்கு ஒரு பாடம். பன்றிக் காய்ச்சலை வெற்றி கொள்ள வேண்டுமென்றால், நாம் அதைவிட வேகமாக ஓடியாக வேண்டும். வெறுமனே உட்கார்ந்தபடியே வெற்றிகொள்ள முடியுமா என்ன?