பிஹார் நாடகங்கள் ஒருவழியாக ஓய்ந்திருக்கின்றன. நிதிஷ்குமார் மீண்டும் பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பிஹாரில் நீடித்த குழப்ப நிலை இப்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
ஜிதன்ராம் மாஞ்சிக்கு ஆதரவா இல்லையா என்பதில் கடைசிவரை பாஜக பூச்சாண்டி காட்டியது. மாஞ்சியைத் தொடர்ந்து ஆதரித்தால் தனது அரசியல் செல்வாக்கு குறைந்துவிடும் என்பதை பாஜக உணர்ந்திருந்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்குள் தனக்கு ஆதரவாகத் திரளக்கூடியவர்கள் அதிகம் இல்லை என்பதால், மேற்கொண்டு எதிர்ப்பதில் அர்த்தமில்லை என்ற ஞானோதயம் மாஞ்சிக்கு இறுதியில்தான் ஏற்பட்டிருக்கிறது. மக்களவைப் பொதுத்தேர்தல் தோல்விக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை பிஹார் மக்கள் ஏற்கவில்லை என்பதை உணர்ந்த நிதிஷ்குமார், மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்ந்திருக்கிறார்.
மகா தலித்துகளின் பிரதிநிதியான ஜிதன்ராம் மாஞ்சியை சந்தர்ப்பவாதி என்று ஐக்கிய ஜனதா தளம் கருதினாலும், அந்தப் பிரிவு மக்களின் ஆதர்சத் தலைவர் அவர் என்பதை மறுப்பதற்கில்லை. உத்தரப் பிரதேசத்தில் உள்ளதைப் போல பிஹார் தலித்துகள் இதுவரையில் அரசியல்ரீதியாகத் திரளவில்லை. மகா தலித்துகளின் ஆதரவைப் பெறுவதற்காக ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக்கியிருந்தாலும், அதே அரசியல் காரணமாகத்தான் அவரை விலக்க நேர்ந்திருக்கிறது. ஆகவே, ஆட்சியதிகாரத்தில் தங்களுடைய பிரதிநிதிக்கு முக்கியப் பதவி கிடைத்ததையும் பிறகு பறிக்கப்பட்டதையும் மகா தலித்துகள் மறக்க மாட்டார்கள். அதைப் போன்ற அரசியல் செல்வாக்கைப் பெற அவர்கள் மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கலாம். இந்தச் சூழலை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையோர் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக எதிர்ப்பு அணி திட்டமிட்டுவருகிறது. மகாராஷ்டிரத்திலும் ஹரியாணாவிலும் பட்டியல் இனத்தவர்களை ஈர்த்ததைப் போல பிஹாரிலும் ஈர்க்க பாஜக எல்லா தந்திரங்களையும் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முறை பாஜக தலைமையில் பிஹாரில் சிறிய கட்சிகள்தான் அதிகம் ஒன்றுசேரும். தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் போக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க பாஜக வசம் நிறைய தொகுதிகள் இருக்கும். நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்குத் தொகுதிகளைப் பகிர்வதுதான் பிரச்சினையை ஏற்படுத்தும். பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக மண்டல் ஆதரவு சக்திகளையும் சிறுபான்மையினரையும் திரட்டித் தேர்தலில் வெற்றிபெற நிதிஷ்குமார் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பிஹாரில் இனி அரசியல் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும்.
மலை போல் சவால்கள் குவிந்துகிடக்கின்றன நிதிஷ் முன்னால். ஆனால், இதைப் போன்ற பெரும் சவால்களை ஏற்கெனவே சந்தித்தவர்தான் நிதிஷ். ஊழல் மலிந்த லாலுவின் ஆட்சியால் தடுமாறிப் பள்ளத்தில் வீழ்ந்துகிடந்த பிஹாரில் வியப்பூட்டும் வகையிலான மாற்றங்களை ஏற்படுத்தியவர் அவர். எனினும், இந்த முறை லாலுவுடன் கைகோத்திருப்பது அவருடைய நம்பகத்தன்மைக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, மீண்டும் முதல்வராகிவிட்டதால் நிதிஷ்குமாரின் பிரச்சினைகள் தீர்ந்துவிடவில்லை, ஆரம்பமாகியிருக்கின்றன என்பதுதான் உண்மை.