தலையங்கம்

இதுதான் மின்சாரத் தன்னிறைவா?

செய்திப்பிரிவு

உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது, தமிழ்நாடு மின் வாரியம் சந்தித்திருக்கும் இழப்பு குறித்த தகவல். 2013-2014 காலகட்டத்தில் மின் வாரியத்துக்கு அதிகரித்திருக்கும் இழப்பின் மதிப்பு ரூ. 13,985.3 கோடி. தமிழ்நாடு மின்வாரியத்தின் இணையதளமே தெரிவிக்கும் தகவல் இது. அதைவிடப் பேரதிர்ச்சி: இத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சேர்ந்திருக்கும் மொத்தக் கடன் சுமையின் மதிப்பு ரூ.74,133.11 கோடி மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் பாதி!

தமிழ்நாடு மின்வாரியம் 2011-12-ல் சந்தித்த இழப்பு ரூ.13,321.34 கோடி. அந்த நிதியாண்டில் மின்சார விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் 11% உயர்ந்திருந்தது சற்றே ஆறுதலை ஏற்படுத்தினாலும் வருவாயை விடக் கடன் பெருகும் வேகம் அதிகமாகிவிட்டிருக்கும் நிதர்சனம் நம் முகத்தில் அறைகிறது. மின்சாரக் கொள்முதலுக்கு மிக அதிக விலை கொடுத்ததும், ஏற்கெனவே வாங்கிய கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டியின் சுமையும்தான் வருவாயை மீறிய கடன் சுமைக்கான பிரதானமான காரணங்களாகச் சொல்லப் படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே மின் தேவையைச் சமாளிக்கவும், மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கவும் மின்சாரக் கொள்முதலை அதிகரித்துக்கொண்டே வருகிறது தமிழக அரசு. பல சமயங்களில், “பொதுச் சந்தையில் விற்கப்படும் விலையைவிட அதிக விலை கொடுத்தே மின்சாரம் வாங்கப்படுகிறது; இதன் பின்னணியில் தனிப் பட்ட சிலரின் நலன்கள் இருக்கின்றன” என்று அவ்வப்போது எதிர்க் குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. அரசோ, வேறு வழியில்லாமல் தான் அதிக விலை கொடுத்து வாங்கினோம் என்று சமாளித்து வந்தது. அதன் பலன் இப்போது அறுவடைக்குக் காத்திருக்கிறது!

மின் துறையைப் பொறுத்தவரை எந்த அரசாக இருந்தாலும் தொலைநோக்குப் பார்வையே இல்லாமல் செயல்படுவது தமிழகத்தின் சாபக்கேடாக மாறிவிட்டது. சுற்றுச்சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்காத எத்தனையோ மாற்று வழிகளை உலகின் பல நாடுகள் வெற்றிகரமாகக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் இன்னும் மரபான வழிகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதில் என்ன பயன்? இந்தியாவுக்குள்ளேயே குஜராத்தில், மகாராஷ்டிரத்தில் என்று பல்வேறு மாநிலங்களில் பல்வேறு முன்னுதாரணங்கள் இருக்கின்றன உற்பத்தியிலும் விநியோகத்திலும்.

ஒரேயடியாக ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாதுதான். ஆனால், உற்பத்தி ஒரு பக்கம் இருந்தாலும் நிர்வாகத்தில் நடைபெறும் சீர்கேடுகளை சரிசெய்தாலே பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். கூடவே, மாற்றுவழி மின்னுற்பத்தியில் வணிக நிறுவனங்களையும் பிற வர்த்தகப் பயன்பாட்டாளர்களையும் பொதுமக்களையும் எப்படி ஈடுபடுத்தலாம் என்பதைப் பற்றியும் அரசு பரிசீலிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள்தான் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதுடன் மின் வாரியத்தின் நிதி நிலைமையையும் மேம்படுத்தும்.

மின்சாரத்தைப் பொறுத்தவரை தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் தமிழகத்தை ஆக்குவோம் என்று சொல்லித்தான் ஒவ்வொரு அரசும் பதவியேற்கிறது. ஆனால், முந்தைய அரசுகளின் பாதையிலேயே புதிய அரசுகளும் பயணித்து மின்சாரத்தை மேலும் மேலும் பிரச்சினைக்குரியதாக ஆக்கிவருகின்றன. மிக மோசமான இருண்ட காலத்தை நோக்கித் தமிழகம் தள்ளப்படுவதற்கு முன்பாவது அரசு, இந்த விஷயத்திலாவது செயல்பட ஆரம்பிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT