இலங்கையில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த உடனேயே அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா புதுடெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் புகார்ப் பட்டியல் மிக நீண்டது. தமிழ்நாட்டில் உள்ள சில தீவிர இலங்கை எதிர்ப்பாளர்களின் தொடர் செயல்பாடுகள், இலங்கையின் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபடுவது போன்றவை குறித்த புகார்கள் அவை. போருக்குப் பிறகு, தமிழர்களுக்குச் சுமுகமான அரசியல் தீர்வைக் காணத் தவறியது, காணாமல் போனவர்கள், முகாம்களிலும் சிறைகளிலும் இன்னமும் இருப்பவர்கள், இறந்தவர்கள்குறித்த தகவல்களைத் தமிழர்களுக்குத் தெரிவிக்காமல் மனித உரிமைகளை இலங்கை அரசு மீறுவது போன்றவை குறித்து இந்திய அரசுக்கும் அதன் மீது அதிருப்திகள் இருக்கின்றன. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் இதனாலேயே இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு முறை வாக்களித்தது இந்தியா. ஒரு முறை வாக்களிக்கவில்லை. சீனப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தில் - ஒரே ஆண்டில் இரண்டு மாத கால இடைவெளியில் - அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதுகுறித்தும் இந்தியாவுக்குக் கடும் அதிருப்தி இருந்தது.
இலங்கையின் சீனச் சார்புத் தோற்றத்தை மாற்ற முயற்சிப்பதாக சமரவீரா வெளியிட்ட அறிக்கை இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. அதே வேளையில், இந்திய ஆதரவு நிலையை இலங்கை அரசு எடுத்தால், இலங்கையின் பெரும்பான்மை மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும் என்பது இக்கட்டான நிலைமை. இரு நாடுகளுமே புவியியல்ரீதியாகப் பக்கத்து நாடுகளாக இருப்பதையும், ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவந்த நட்புறவையும் பயன்படுத்தி உறவைச் சீரமைப்பதே இப்போதைக்கு இரு நாடுகளும் உடனடியாகச் செய்யக் கூடியது.
முற்றிலுமாக நம்பிக்கை இழந்துபோயிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். அரசியல், போராட்டம் என்ற சொற்களெல்லாம் அவர்களிடம் அர்த்தமிழந்துபோயிருக்கின்றன. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை இனியும் கண்டுகொள்ளாமல் அந்த நாட்டு அரசு இருக்க முடியாது. போர்க் குற்றங்கள்குறித்து விசாரிக்க வேண்டும், காணாமல்போன, இறந்துபோன தமிழர்கள்குறித்த தகவல்களைத் திரட்டித் தர வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளையும் புதிய அரசு உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரும்போது, இந்த விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நம்பலாம். சிறிசேனா தற்போதுதான் பதவியேற்றிருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் அவருக்குப் பெருமளவில் கிடைத்திருக்கின்றன என்பதால், தங்களுக்கு நன்மைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே இலங்கைத் தமிழர்கள் எண்ணுகிறார்கள். நம்பிக்கையோடு சற்றுப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!