இந்தியாவில் புலிகளின் இனம் பெருகியிருப்பதுகுறித்து வெளியான அறிக்கை சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வனப் பகுதிகளின் பரப்பு குறைந்தும், வனங்களுக்கு அருகில் வனப் பழங்குடியினர் அல்லாத மக்களுடைய குடியேற்றம் அதிகரித்தும்வரும் இவ்வேளையில், புலிகளின் எண்ணிக்கை நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் அதிகமாகியிருக்கிறது. அரசு, வனத் துறை, பழங்குடிகள் என்று அனைவரது கூட்டுச் சாதனைதான் இது!
4 ஆண்டுகளுக்கு முன்னால் 1,706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது 2,226 ஆக உயர்ந்திருப்பதாக சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. நாட்டின் வடகிழக்கில் உள்ள மலைப் பகுதிகளில்தொடங்கி, மத்திய இந்தியாவில் உள்ள வனங்களை உள்ளடக்கி, மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் வரை கணக்கெடுத்ததில் இது தெரியவந்துள்ளது. அலையாத்திக் காடுகள் நிரம்பிய கங்கை வடிநிலத்தையொட்டிய சுந்தரவனப் பகுதியிலும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் புலிகள் அடியோடு அழிந்துவிட்டபடியால், புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்க மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து நடவடிக்கைகளை எடுத்தன. அதைப் போலப் பல்வேறு மாநிலங்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் புலிகளின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் வனப் பகுதிகளில் பொதுமக்கள் நுழைவதற்குத் தடை விதித்தது, தொழில் - வியாபார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியது, வேட்டைகளைக் கணிசமாக ஒடுக்கியது போன்ற நடவடிக்கைகளால்தான் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும். ‘பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி’ என்ற பிரதேசங்களின் கீழ் மேலும் பல பகுதிகளைக் கொண்டுவர வேண்டும்.
அப்படிச் செய்யும்போது வனப் பழங்குடியினரை அவர்கள் வாழிடத்திலிருந்து வெளியேற்றிவிடக் கூடாது. புலிகளைப் போலவே வனப் பழங்குடியினருக்கும் சொந்தமானது காடு. வனப் பழங்குடியினர் இல்லாமல் வனப் பாதுகாப்பு சாத்தியமே இல்லை என்பதையே புலிகள் பாதுகாப்பில் நாம் கண்டறிந்த உண்மை.
புலிகள் பெருக்கத்துக்குப் பரந்த நிலப்பரப்பு தேவை. இப்போதுள்ள இடங்களிலிருந்து விலகி, நாலாப்புறங்களிலும் புலிகள் பிரிந்து வாழ மேலும் பல ஏக்கர் நிலப் பகுதி தேவைப்படுகிறது. அத்துடன் இந்தியாவின் ஒரு வனப் பகுதியிலிருந்து இன்னொரு வனப் பகுதிக்கு இடைவெளியற்ற காட்டுப் பாதை அவசியம். அப்படியிருந்தால்தான் புலிகள் சிறுசிறு கூட்டங்களாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்ய முடியும். எனவே, வனப் பரப்பை அதிகப்படுத்துவது புலிகள் பாதுகாப்புக்கு மிகவும் அடிப்படையானது.
இயற்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதன் குறியீடுதான் புலி. புலிகளைக் காக்கும் நடவடிக்கைகள் மூலமாகக் காடுகள் பெருகுவதுடன் காடுகளை நம்பி வாழும் மற்ற உயிரினங்களும் பெருகும். ஆனால், புலிகள் இல்லாத பிரதேசத்தில் உள்ள எத்தனையோ உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. புலிகளின் அந்தஸ்து அவற்றுக்கும் கிடைப்பது எப்போது?