தலையங்கம்

எதிர்க் கட்சிகளின் கடமை என்ன?

செய்திப்பிரிவு

மிக முக்கியமான தருணத்தில், மிக முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசும் எதிர்க் கட்சிகளும் இன்றியமையாத இரு அங்கங்கள். நாட்டின் நிர்வாகத்துக்காக ஆளும் கட்சி அல்லது கூட்டணி கொண்டுவரும் மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்வது ஆளும் கட்சியின் கடமை மட்டுமல்ல, அதை நிறைவேற்றித் தருவதில் எதிர்க் கட்சிகளுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் பிரணாப்.

1952-ம் ஆண்டு முதல் இதுவரை நான்கு முறை மட்டுமே நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்துக் கூட்டுக் கூட்டம் நடத்தி மசோதாக்களை நிறைவேற்றியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரணாப், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஆளும் கூட்டணிக்கு உணர்த்தியிருக்கிறார்.

அரசு கொண்டுவரும் மசோதாக்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டவும் அதில் சேர்க்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள்குறித்து அரசு ஏற்கும் விதத்தில் விவாதிக்கவும் எதிர்க் கட்சிகளுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஜனநாயகத்துக்காகப் போராடுவதை விட்டுவிட்டுத் தங்களின் சுயலாபங்களுக்காகவும் அரசியல் கணக்குகளுக்காகவும் வீண் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சியினர் ஈடுபடுவதே அதிகம். அது மட்டுமல்லாமல், அவைத் தலைவரின் கட்டளைக்குக் கட்டுப்படாமல் அவரது இருக்கையைச் சூழ்ந்துகொண்டு கோஷமிடுவது, கோரிக்கை அட்டைகளை ஏந்திவருவது, காகிதங்களைக் கிழித்தெறிவது, உரத்த குரலில் மூச்சுவிடாமல் கோஷமிடுவது போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் உச்சம்தான் ‘பெப்பர் ஸ்பிரே’ விவகாரம்.

தற்போதைய சர்ச்சையெல்லாம் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு அரசு கொண்டுவந்துள்ள முக்கியமான திருத்தங்கள் பற்றியதுதான். மூலச் சட்டத்தை அடியோடு மாற்றும் இதை அவசரச் சட்டமாக அரசு கொண்டுவந்தாலும், மீண்டும் நாடாளுமன்றம் கூடிய ஆறு வாரங்களுக்குள் அதன் ஒப்புதலைப் பெறாவிட்டால், அந்த அவசரச் சட்டமே காலாவதியாகிவிடும். அவையில் விவாதம் நடந்திருந்தால் சில பிரிவுகளைத் திருத்த அரசு ஒப்புக்கொண்டிருக்கக்கூடும். இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஆனால், அது மக்களுடைய நன்மையை ஒட்டியதாக இருக்க வேண்டும், தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமானதாக அல்ல.

இது போன்ற தருணத்தில்தான் எதிர்க் கட்சிகளின் கடமைகள் இன்னும் அதிகரிக்கின்றன. ஆனால், பெரும்பாலானோர் அந்தக் கடமைகளை உணராமல் இருப்பதுதான் விநோதம். எதிர்க் கட்சிகளின் வரிசையில் யார் இருந்தாலும் அவை நடவடிக்கைகளைக் குலைப்பதில்தான் கவனமாக இருக்கிறார்களே தவிர, நியாயமான முறையில் விவாதம் நடத்துவதில் எந்தத் தரப்புமே ஈடுபாடு காட்டுவதில்லை. கேள்வி நேரம் என்பது ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டுவர ஜனநாயகம் அளித்துள்ள அருமையான ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தெரியாவிட்டால், எதிர்க் கட்சிகள்குறித்து வருத்தப்படுவதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

மக்களிடையே சென்று அவர்களுடைய பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொண்டு, நாடாளுமன்றத்தில் அவற்றை எழுப்பி அரசைத் திணறவைத்த அந்தக் கால எதிர்க் கட்சித் தலைவர்கள் இப்போது இல்லை. எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் இயல்பும் ஆளும் கட்சிகளிடையே சமீப காலங்களில் காணப்படவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரணாப் சொல்வதற்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் செவிமடுப்பதுதான் இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது.

SCROLL FOR NEXT