கற்பனை செய்துபார்க்க முடியாத கொடூரம் நடந்திருக்கிறது நமது அண்டை நாட்டில். அந்நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் இயங்கிவரும் ராணுவப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனிதத் தன்மையற்ற இந்தத் தாக்குதல் உலக நாடுகளின் தலைவர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்திருக்கிறது.
கனவுகளுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்ற தங்கள் குழந்தைகள் சவப்பெட்டியில் ரத்தம் தோய்ந்த உடல்களாகத் திரும்புவார்கள் என்று பெஷாவர் நகரப் பெற்றோர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மீள முடியாத பெரும் துயரத்தில் அந்த நகரம் மட்டுமல்ல, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகமே ஆழ்ந்திருக்கிறது.
கடந்த ஜனவரியில் ராவல்பிண்டி ராணுவத் தலைமையகத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், 13 பேர் கொல்லப் பட்டனர். ஜூன் மாதம் பெஷாவர் விமான நிலையம் மீது தாக்குதல், ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாகாணம் காம்ராவின் விமானப் படைத் தளம் மீது தாக்குதல், செப்டம்பரில் கராச்சியின் கப்பற்படை தளத்தில் தாக்குதல் என்று இந்த ஆண்டு மட்டும் பல தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியிருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்கள் வழக்கமாகிவிட்ட அந்த நாட்டில், குழந்தைகள் மேல் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல், மனிதாபிமானம் உள்ள அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.
செவ்வாய்க்கிழமை காலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், துணை ராணுவப் படை சீருடையில் வந்த 9 பயங்கரவாதிகள், அந்தக் கொடூரச் செயலில் இறங்கியிருக்கிறார்கள். ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று, மாணவர்களைத் தேடித் தேடி வேட்டையாடியிருக்கிறார்கள். பல மாணவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆசிரியை ஒருவரை நாற்காலியில் கட்டிவைத்து உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள் தலிபான்கள். நடப்பது என்னவென்று புரியாமலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள் குழந்தைகள். 7 மணி நேரம் நடந்த இந்த கோரத்தாண்டவத்தில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்திருக்கிறார்கள். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
“வடக்கு வஜிரிஸ்தானில் எங்கள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகத்தான் இந்தத் தாக்குதலை நடத்தினோம். எங்கள் வலி ராணுவத்துக்கு இப்போது புரியும்” என்று துளியும் இரக்கமில்லாமல் பேசியிருக்கிறார் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி. சக மனிதர்களின் வலியை அறிந்துகொள்ளாதவர்கள் வலியைப் பற்றிப் பேசுவதுதான் பேரவலம்.
பாகிஸ்தான் அரசும் ராணுவமும் தங்கள் நாட்டின் மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். “பயங்கரவாதிகளை நாங்கள் வளர்த்துவிடுவதில்லை” என்று சப்பைக்கட்டுக் கட்டாமல், இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் பாகிஸ்தான் அரசும் ராணுவமும். அதுதான் உயிரிழந்த தளிர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.