தலையங்கம்

பயங்கரவாதமே விலகிப் போ!

செய்திப்பிரிவு

பொருத்தமான தருணத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது! இராக்கிலும் சிரியாவிலும் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு தடைசெய்திருக்கிறது.

இந்தியாவில் இதுவரை இந்த இயக்கத்துக்குப் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சில இளைஞர்கள் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த அமைப்புடன் தொடர்புகொண்டுவருவது தெரியவந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இளைஞர் ஆரீஃப் மஜீத் அங்கு சென்று பயிற்சி பெற்று தாய்நாடு திரும்பியிருக்கிறார். அதேபோல், பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் மெஹ்தி பிஸ்வாஸ் ஐஎஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ட்விட்டர் இணையதளத்தைப் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது மேற்கொண்டு பரவாமல் தடுக்க இந்தத் தடை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த அமைப்புக்குத் தடைவிதிக்குமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. அந்த இயக்கத்தில் தங்கள் நாட்டு இளைஞர்கள் போய்ச்சேராமல் தடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆயுதங்களும் பிற உதவிகளும் அளிக்கப்படாமல் காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இந்தியப் புலனாய்வு அமைப்பும் ஐ.எஸ். அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரியது. அப்படித் தடை விதித்தால் அதன் ஆதரவாளர்கள் தலைமறைவாகப் போகவும் அந்த அமைப்புக்கு மேலும் அனுதாபமும் ஆதரவும் பெருகவும் வழி வகுத்துவிடும் என்றும் அதிகார வட்டாரங்கள் கருதின.

இராக்கில் ஐ.எஸ். அமைப்பின் பிடியில் சில மாதங்களுக்கு முன் சுமார் 40 இந்தியர்கள் பிணைக்கைதிகளாகச் சிக்கிக்கொண்டார்கள். அவர்களுடைய நிலைமை என்னவென்று தெரியாமல் ஐ.எஸ். அமைப்பைத் தடைசெய்வது ஆபத்தில் போய் முடியும் என்பதால் அப்போது அந்த அமைப்புக்குத் தடைவிதிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஹோட்டலில் புகுந்த ஐ.எஸ். ஆதரவாளராகக் கருதப்படும் பயங்கரவாதி ஒருவர், துப்பாக்கி முனையில் சிலரைப் பிணையாகப் பிடித்துக்கொண்டு சில மணி நேரம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தினார். இறுதியில் அவரும் 2 பிணையாள்களும் இறக்க நேரிட்டது. நாசவேலை செய்யவும் பலருடைய உயிரை பலிகொள்ளவும் ஒரு பெரும் படையாகத்தான் பயங்கரவாதிகள் வர வேண்டும் என்றில்லை; ஒரு சிலரோ, தனி நபரோகூட போதும் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கிட்டத்தட்ட 150 பேரின் உயிரை பலிகொண்டிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து இந்திய அரசு ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை விதித்திருக்கிறது. அது மட்டும் போதாது. இணையமும் ஓர் ஆயுதமாக மாறியிருக்கும் இந்தக் காலத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் சைஃபர் கிரைம் பிரிவு தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. உயிரின் மதிப்பு தெரியாமல் பயங்கரவாதப் போக்கில் ஈடுபடும் எந்த அமைப்பும், அது எந்த மதத்தையும் எந்தக் கோட்பாட்டையும் சேர்ந்ததாக இருந்தாலும் இந்திய அரசு அதைத் தடைசெய்வதற்குத் தயங்கவே கூடாது.

SCROLL FOR NEXT