பாகிஸ்தானின் பெஷாவர் நகர் ராணுவப் பள்ளியில் புகுந்து தலிபான்கள் நடத்திய வெறியாட்டத்தில், 132 பள்ளி மாணவர்கள் உட்பட 148 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், பாகிஸ்தானில் இருந்து மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. 2008 மும்பைத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கமாண்டர் ஜக்யுர் ரஹ்மான் லக்விக்கு, பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் அளித்திருக்கிறது.
மும்பை தாக்குதலின் மூளையாக இருந்து செயல்பட்டவரும், ஆட்களைச் சேர்த்தவரும் லக்விதான் என்று, இதே வழக்கில் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட கஸாப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். டேவிட் ஹெட்லியும் தனது வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலில் லக்வி ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மும்பையில் தாக்குதல் நடந்தபோது, கராச்சியில் தனது அறையின் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்தபடி, “எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரைக் கொல்லுங்கள்” என்று கொலைவெறியுடன் உத்தரவிட்டவர் லக்வி.
ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்குத் தொடர் பில்லை என்று மறுத்துவந்த பாகிஸ்தான், இந்தியா அளித்த உறுதியான சான்றுகளுக்குப் பின்னர் அரை மனதோடு உண்மையை ஒப்புக்கொண்டது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தனக்கும் ஆர்வம் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, 2009-ல் லக்வியைக் கைதுசெய்தது. இந்நிலையில், ராவல்பிண்டி சிறையிலிருந்த லக்வி, தனக்கு ஜாமீன் வழங்குமாறு டிசம்பர் 10 அன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்தான் ‘போதிய ஆதாரங்கள் இல்லாத’ காரணத்தைக் கூறி இப்போது லக்விக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.
பெஷாவர் பள்ளி மாணவர்கள் படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், “ஒவ்வொரு பயங்கரவாதியும் ஒழித்துக்கட்டப்படும் வரை எனக்கு ஓய்வில்லை” என்று குறிப்பிட்டார். அந்த வார்த்தைகள் காற்றில் கரைவதற்கு முன்னரே, பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது இங்கே கவனிக்கத் தக்கது.
இந்தச் செய்தியை அறிந்த இந்தியா, கடுமையான கண்டனத்தை பாகிஸ்தானுக்குத் தெரிவித்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “லக்விக்கு எதிராக, போதுமான சான்றுகள் அனைத்தையும் வழங்கியிருக்கிறோம். இத்தனைக்குப் பிறகும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவிலும் லக்விக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் அதிர்வுகளை உண்டாக்கிய நிலையில், இப்போது அவசர அவசரமாக லக்வியை மேலும் 3 மாதங்களுக்குச் சிறையில் வைத்திருக்க உத்தரவிட்டிருக்கிறது பாகிஸ்தான் அரசு. இதுவும்கூடக் கண்துடைப்பு நடவடிக்கைதான். ஏனென்றால், பொது அமைதியைப் பராமரிக்கும் சட்டத்தின் கீழ்தான் இந்த உத்தரவைப் பாகிஸ்தான் பிறப்பித்திருக்கிறது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை மட்டுல்ல; அப்படி ஜாமீன் அளிக்க அது கூறிய காரணம்: “லக்விக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை.”
பாகிஸ்தான் அரசின் காவல் விசாரணை அமைப்புகள் மும்பை தாக்குதலையும் லக்வியையும் எந்த லட்சணத்தில் அணுகிவந்திருக் கின்றன என்பதற்கு ஒரு சோறு பதம் இது. பயங்கரவாதம் என்பது கைப்பிடி இல்லாத கூரிய கத்தி. பெஷாவர் குழந்தைகளைக் குதறிப் போட்டது அந்தக் கத்திதான். தங்கள் சதுரங்க வேட்டைக்காக அகமொன்று புறமொன்று என இரு வேஷ ஆட்டத்தை இனியும் பாகிஸ்தான் தொடர்ந்தால், பெஷாவர் குழந்தைகளின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.