இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் வாகா நுழைவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர் இறந்திருப்பது மிகவும் கொடூரமானது.
பாகிஸ்தானுக்கு எதிரி இந்தியாவல்ல; உள்நாட்டிலேயே இருக்கும் பயங்கரவாதிகள்தான் என்பதை உணர்த்தக் கூடிய சம்பவங்களின் தொடர்ச்சிதான் இந்தக் குண்டுவெடிப்பும். துரதிர்ஷ்ட வசமாக இதையெல்லாம் உணரும் வகையில் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் இல்லை. இந்தியாவுக்கு எதிராக நேரடிப் போர் நடத்தினால் வெற்றிபெறுவது கடினம் என்பதற்காகத் பயங்கரவாதிகளை மறைமுகமாக ஊக்குவித்ததன் பலனை பாகிஸ்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
‘தற்கொலைப் படையை அனுப்பித் தாக்குதல் நடத்தியது நாங்கள் தான்’ என்று பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் 3 பயங்கரவாத அமைப்புகள் உடனே உரிமை கொண்டாடியிருக்கின்றன. வாகா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் நாட்டு எல்லைக்காவல் படை வீரர்கள் கொடி இறக்கும் நிகழ்ச்சியின்போது அதை நேரில் பார்ப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் அன்றாடம் கூடுவது வழக்கம். அப்படி வந்தவர்கள்தான் நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது தற்கொலைப் படையின் தாக்குதலுக்கு பலியாகி யிருக்கிறார்கள். சுமார் 20 கிலோ முதல் 25 கிலோ எடையுள்ள வெடிகுண்டை உடலில் கட்டியிருந்து வெடிக்க வைத்தவர் பெயர் சஜ்ஜத் உசைன் என்று ஜுன்டுல்லா, ஜமாத்-உல்-அரார், மஹர்-மெசூத் என்ற பயங்கரவாதக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தேரிக்-ஐ-தலிபான்
(டி.டி.பி.) என்ற அமைப்பின் ஒரு பிரிவுதான் ஜுன்டுல்லா. இந்த மூன்று குழுக்களுமே முதலில் ஒரே அமைப்பில் இருந்தவைதான். 2013 செப்டம்பரில் பெஷாவர் நகர தேவாலயத்தில் குண்டுவெடிக்கச் செய்து ஏராளமானோரை பலி கொண்டதும் ஜுன்டுல்லா அமைப்புதான்.
வடக்கு வஜீரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ் தானிய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், இது மேலும் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாகப் போய்விடும் என்று எச்சரிக்கவும் இப்படிச் செய்ததாகப் பயங்கரவாத அமைப்புகள் தெரிவித்துள்ளன. ‘பாகிஸ்தானின் வாகா வரை சென்ற எங்களால் எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ளேயும் இப்படித் தாக்குதல்களை நடத்த முடியும்’ என்றும் எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மதத்தைக் காப்பது என்ற போர்வையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தருவதையும் அனுதாபம் காட்டுவதையும் பாகிஸ்தான் முதலில் நிறுத்த வேண்டும். ‘இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம்தானே, செய்து கொள்ளட்டும்’ என்று அனுமதிப்பதன் விளைவாக இந்த அமைப்புகள் ஊக்கம் பெற்று மக்களிடையே அனுதாபத்தையும் செல்வாக்கையும் வளர்த்துக்கொள்கின்றன. தங்களுக்கென்றுள்ள பகுதியில் ராணுவம், போலீஸ் வருவதையும் எதிர்க்கின்றன. அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இத்தனை ஆயுதப் படைகள் இருப்பதன் விளைவுதான் எல்லாம்.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இரு நாடுகளும் இப்படியே பகைமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும்? தீர்வுகளுக்கு ஆயுதங்களையே இன்னும் எத்தனை காலம்தான் நாடுவது? உடனடித் தேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைதான். பாவனை பேச்சுவார்த்தையல்ல; அமைதியை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைதான் சாத்தியமாகக் கூடிய ஒரே வழி. இந்த உண்மையைத்தான் முகத்தில் அறைந்தது போன்று வாகா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் சொல்கின்றன.