தலையங்கம்

வரலாற்றுச் சந்திப்பு வரலாற்றுத் தீர்வை உலகுக்குத் தரட்டும்

செய்திப்பிரிவு

இரண்டு கொரிய நாடுகளையும் பிரிக்கும், ‘ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு’ சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரலாறு படைத்துவிட்டார். அமெரிக்க அரசுகளால் எதிரியாகப் பார்க்கப்படும் வடகொரியாவின் நிலத்தில் கால் பதித்த ஒரே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பதே அந்த வரலாறு. ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த ட்ரம்ப் - கிம் ஜோங் இடையேயான இந்தச் சந்திப்பு, பிரயோஜனமான விளைவுகளைத் தந்தால், கொரிய தீபகற்பத்தில் அமைதி தழுவ அது வழிவகுக்கும்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களே இல்லையென்ற அளவுக்கு அவற்றை அகற்றிவிட நாங்களும் தயார்தான் என்று கொள்கையளவில் குறிப்பிட்டிருக்கிறார் கிம். இதுதான் அமெரிக்காவின் விருப்பமும். ஆனால் இது, எப்போது, எப்படிச் சாத்தியமாகும் என்பதுதான் விடை காணப்பட வேண்டிய கேள்வி. தங்கள் மீது பொருளாதாரத் தடை உட்பட பல்வேறு தடைகள் விதிக்கப்படாமல் இருக்க, யோங்பியான் நகரில் உள்ள அணு எரிபொருள் உற்பத்திப் பிரிவை மூடிவிடுவதாக வடகொரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஒரு இடத்தில் மட்டும் என்றில்லாமல், வெவ்வேறு இடங்களிலும் அணுசக்தி தொடர்பான நிலையங்களை வடகொரியா வைத்திருப்பதால் ஓரிடத்தில் மட்டும் மூடுவதால் பயனில்லை என்று அமெரிக்கா கூறியது. இதனால், அந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஹனோய் நகரில் இரு தரப்பும் சந்தித்துப் பேசியபோது, பேச்சுவார்த்தைகளை எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்திலிருந்தே இரு தரப்பும் தொடங்குவது என்ற முடிவை இப்போது இரு தலைவர்களும் எடுத்திருக்கின்றனர். முந்தைய பேச்சில் முன்னேற்றம் இல்லை என்றதும் வடகொரியர்கள் பதற்றம் அடைந்திருந்தனர். அமெரிக்க வடகொரியப் பேச்சு முட்டுக்கட்டை நிலையை அடையக் காரணம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர், தென்கொரியத் தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டினர். இப்போது ட்ரம்பும் கிம்மும் இருதரப்புப் பேச்சுகளுக்குக் குழுவை நியமிக்க முடிவெடுத்திருப்பது நல்ல விஷயம்.

அமெரிக்கா அறிவித்த தடைகளில் ஓரளவையாவது நிறுத்திவைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று வடகொரியா மீண்டும் பேச வேண்டும். வடகொரியாவில் உள்ள எல்லா அணு நிலையங்களையும் மூடிவிட வேண்டும் என்று அமெரிக்காவும் விடாப்பிடியாக வற்புறுத்தினால் பேச்சில் தீர்வு ஏற்படுவது கடினம். நம்பகமான சூழலை அமெரிக்கா உருவாக்குவதன் வாயிலாகவே படிப்படியாக வடகொரியா அந்த இலக்கை நோக்கி நகர்வதற்கான இடத்தை உருவாக்க முடியும். இரு தலைவர்களும் அப்படி ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

SCROLL FOR NEXT