கர்நாடகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அங்கே குதிரை பேர அரசியல் மீண்டும் தீவிரமாகியிருக்கிறது; காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலையில் பாஜக இறங்கியிருப்பதாக எழுந்த சலசலப்புகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருப்பதாலும், காங்கிரஸ்-மஜத இடையே ஏற்பட்ட திடீர் கூட்டணி ஏகப்பட்ட கோளாறுகளுடன் தள்ளாடுகிறது என்பதாலும் பாஜகவுக்குத் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் 104 தொகுதிகளை வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அதற்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைக்காத நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கைகோத்தன காங்கிரஸும் மஜதவும். காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மஜத 38 தொகுதிகளிலும் வென்றிருந்த நிலையில், இரண்டும் சேர்ந்து ஆட்சி அமைத்தன. மஜதவின் எச்.டி.குமாரசாமி முதல்வரானார். பொதுவாகவே, எண்ணிக்கையில் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, கூட்டணிக்குத் தலைமை வகித்தாலே அந்தக் கூட்டணிக்கு அற்ப ஆயுள்தான். அது மட்டுமல்லாமல் அன்றாட நிர்வாகத்தைக்கூட கவனிக்க முடியாதபடி பெரிய தோழமைக் கட்சி தன்னுடைய இருப்பை வலியுறுத்துவதற்காக, சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் முக்கிய முடிவுகளை எடுக்கவிடாமலும் தடுத்துக்கொண்டே இருக்கும்.
காங்கிரஸுக்கும் மஜதவுக்கும் இடையில் உரசல்களும் கருத்துவேறுபாடுகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. தனது அரசின் ஆயுளை உறுதிசெய்வதற்காக சுயேச்சை உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி தந்தார் குமாரசாமி. காங்கிரஸில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு இது கசப்பை உருவாக்கியிருக்கிறது. எனவே, ஆட்சியைக் கைப்பற்ற இதுதான் சமயம் என்று செயலில் இறங்கியிருக்கிறது பாஜக. ஆளும் கூட்டணியிலிருந்து மேலும் சில உறுப்பினர்கள் பதவி விலகினாலே பாஜகவுக்குப் பெரும்பான்மை கிட்டிவிடும். பிறகு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பாஜக கருதுகிறது. விளைவாக, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள போராடத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ் - மஜத கூட்டணி.
உண்மையில், கர்நாடக அரசுக்குப் பேராபத்து பாஜக அல்ல; கூட்டணிக்குள் நிலவும் பூசலும் அதிகார வேட்கையும்தான். ஆட்சி அமைத்த இந்த ஒரு ஆண்டு காலத்தில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு அரசு சென்றிருக்குமானால் ஆட்சிக்கு அதுவே வலு தந்திருக்கும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி படுதோல்வி அடைய மக்களிடம் இந்த ஆட்சி மீது ஏற்பட்டிருந்த அதிருப்தியும் காரணம். அதிகாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட கூட்டணிக்கு ஆயுள் குறைவுதான்.