தென் மேற்குப் பருவமழையால் மும்பை மாநகரம் தத்தளிக்கிறது. 2005-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு பெருமழையைக் கண்டிருக்கிறது மும்பை. 24 மணி நேரத்துக்குள் 19 செமீ (190 மிமீ) கொட்டித் தீர்த்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு. பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழையில் ஊறிய பழைய சுவர்கள் இடிந்து விழுந்ததில் 35-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மும்பையை மையமாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிவிட்டன.
புவி வெப்பமயமாதலின் காரணமாக ஒரே நாளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்ப்பதால் பெருவெள்ளம் ஏற்படுகிறது என்றாலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் கட்டுவதாலேயே தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. மழைநீர் வடிகால்களும், கழிவுநீர் வாய்க்கால்களும் அகலத்திலும் ஆழத்திலும் குறுக்கப்பட்டுவிடுவதால், தண்ணீர் வெளியேறும் அளவு குறைந்துவிடுகிறது. அந்த நீர்ப்பாதைகளையும்கூட பிளாஸ்டிக் குப்பைகளும் கட்டிட இடிபாடுகள் உள்ளிட்ட திடக் கழிவுகளும் அடைத்துவிடுகின்றன. தவிர, கனமழை பெய்யும்போது பருவக்காற்றால் கடலில் ஏற்படும் சீற்றமும் அலையெழுச்சியும் நீர்ப்பாதைகள் கடலில் கலக்கும் இடங்களில் எதிர்ப்பட்டுத் தடுப்பதோடு, கடல்நீர் உள்ளே நுழையவும் காரணமாகிறது.
வெள்ளச் சேதத்திலிருந்து மும்பையை மீட்க வேண்டும் என்றால், வணிக நோக்கில் இடங்களை ஆக்கிரமிப்பதை நிறுத்திவிட்டு, நீர்நிலைகளையும் நீர்ப் பாதைகளையும் மீட்க வேண்டும். ஏரிகள், குளங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும், தூர்வாரி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை ஆறுகள், ஓடைகளின் கரைகளிலிருந்து ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யம் பாராமல் அகற்ற வேண்டும். அவற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி மழைநீர் உடனடியாகக் கடலில் சென்றுசேர்வதை உறுதிசெய்ய வேண்டும்.
ஒரு கோடியே எண்பத்துநாலு லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் மும்பை, இந்தியாவின் மூலதனக் கேந்திரம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.16% இங்கிருந்தே கிடைக்கிறது. மொத்த தொழிலுற்பத்தியில் 25% தரும் மாநகரம் மும்பை. கடல் வாணிபத்தில் 70% மும்பை மூலம்தான் நடக்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக 2,272 மிமீ இங்கு பெய்யும். ஆனால், இந்த முறை தாமதமாகப் பெய்யத் தொடங்கினாலும் 10 நாட்களில் 46% அதாவது 1,043 மிமீ மழை கொட்டியிருக்கிறது. இவ்வளவு மழை பெய்தும் குடிநீர் ஏரிகளில் 12% அளவுக்கே கூடுதலாக நீர் சேர்ந்திருக்கிறது. நாட்டின் பொருளாதார இயக்கத்தைத் தீர்மானிக்கும் மும்பையிலேயே, திட்டமிடலும் நீர் மேலாண்மையும் இவ்வளவு அலட்சியமாகக் கையாளப்படுகின்றன என்றால், வளர்ந்துவரும் மற்ற நகரங்கள் திட்டமிடலுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?