தலையங்கம்

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு மட்டும் போதுமா?

செய்திப்பிரிவு

நீ

ட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது தொடர்பான அவசரச் சட்ட முன்வடிவைத் தமிழக அரசு கொண்டுவந்தால் மத்திய அரசு ஆதரிக்கும் என்பதை மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தமிழகம் அவசரச் சட்டத்துக்கான முன்வடிவையும் தங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவான ஆதாரத் தரவுகளையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் இதற்குச் சாதகமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், இப்பிரச்சினைக்கு இது நிரந்தரத் தீர்வாக இருக்குமா எனும் குரல்களும் எழுந்திருக்கின்றன.

நீட் தேர்வுகள் தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதைத் தடுத்துவிடும் என்பது தமிழக அரசு முன்வைக்கும் நியாயமான அச்சம். இதையொட்டியே இரண்டு மசோதாக்களை சட்ட மன்றத்தில் தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. தமிழக அரசின் மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்த மத்திய அரசு, இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு தர திடீரென முன்வந்திருக்கிறது. அதுவும் மத்திய சுகாதார அமைச்சரைத் தவிர்த்துவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் மூலமாக அறிவிப்பதில் அரசியல் சூட்சுமம் இருப்பதாக சந்தேகமும் எழுந்திருக்கிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். மறுபுறம், தமிழக அரசு கேட்டுக்கொண்டபடி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது விலக்கு அளித்திருக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும், நீட் தேர்வை எதிர்கொள்ளும்வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய இந்த ஓராண்டு காலம் போதுமானதாக இருக்காது.

அரசுத் தரப்பில் அதற்கான முயற்சிகளைச் செய்ய முடிந்தாலும்கூட, கடைசியில், அது மாணவர்களுக்குப் பெரும் சுமையாக அமையும். அவர்களின் படிக்கும் மனநிலை பாதிக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான நீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல நேரும். பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கான வாய்ப்பை இது வெகுவாகக் குறைத்துவிடும். நீட் தேர்வு தேவைதான் என்று வாதிட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தங்களுக்குப் பரிச்சயம் இல்லாத பாடத்திட்டத்திலிருந்து தயார்செய்யப்படும் கேள்விகளை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் எதிர்கொள்ளலாம் என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை. எனவே, இவ்விஷயத்தில் நிரந்தரத் தீர்வை நோக்கி அனைத்துத் தரப்பினரும் நகர வேண்டும். கல்வி என்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி அல்ல; மாணவர்களின் எதிர்காலம் என்பதை மறந்துவிடக் கூடாது!

SCROLL FOR NEXT