கு
ம்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
2004 ஜூலை 16 அன்று கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட அந்தத் தீ விபத்து, தமிழகத்தில் பள்ளிகள் எத்தனை மோசமான நிலையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தியது. 40-க்கு 120 அடி அளவில் கூரைக் கொட்டகையுடன் இயங்கிவந்த அந்தப் பள்ளிக் கட்டிடத்தில் மூன்று பள்ளிகள் இயங்கிவந்தன. 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவந்தனர். விபத்து நடந்த அன்று பள்ளியின் ஒரு வாயிற்கதவைப் பூட்டிவிட்டு ஆசிரியர் கள் கோயிலுக்குச் சென்றிருந்தது உள்ளிட்ட காரணிகள் அதிக உயிரிழப்புக்கு வழிவகுத்துவிட்டன. இவ்விபத்து தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களில், பள்ளியின் நிறுவனர், தாளாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் 10 பேருக்கு 2014-ல் சிறைத் தண்டனை விதித்தது தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம். 11 பேர் விடுவிக்கப்பட்டனர். தாளாளர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கிலிருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனையை ரத்துசெய்யக்கோரியும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், இப்படியான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தங்கள் குழந்தைகளின் கோர மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்த பெற்றோர் கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவ்வழக்கை அரசுத் தரப்பு அக்கறையுடன் கையாளவில்லை என்றும் அதிருப்தி எழுந்திருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்துவிட்டுக் கலைந்துவிடுவது எளிது. வழக்கை ஆழமாகக் கவனித்தால், பிரச்சினை புலனாய்வு அமைப்புகளிடம் தொடங்கி, கல்வித் துறையில் போய் முடிவதை உணர முடியும். இந்த வழக்கின் ஒட்டுமொத்த பயணத்திலும் நாம் உணர முடிவது அரசுத் தரப்பின் அலட்சியம். 94 குழந்தைகளின் உயிர்களைப் பலிகொண்டது ஒரு பள்ளிக்கூடத்தின் அலட்சியம் அல்ல. கல்வியை முழு வணிகமாகவும் குழந்தைகளை உருப்படிகளாகவும் பார்த்துவரும் நம் கல்விக் கொள்கையின் கோர முகத்தின் வெளிப்பாடே. இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, பள்ளிக்கூடங்களின் கட்டுமானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கல்வித் துறையின் அடிப்படைக் கட்டுமானத்தில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை. அரசிடம் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத் தின் கரங்களிலும் ரத்தத்தை விட்டுச்சென்ற சம்பவம் இது. அதுவும் எவர் மனதிலும் துளிக் குற்றவுணர்வையும் ஏற்படுத் தாமல் இவ்வளவு எளிமையாகக் கடந்துபோகும் என்றால், நாம் வாழும் காலத்தைப் பற்றி பெரிய அச்சம் எழுகிறது!