தலையங்கம்

உயிர்களைப் பறிக்கும் ரயில் விபத்துகள்: அரசே, என்ன பதில்?

செய்திப்பிரிவு

டிஷா மாநிலத்திலிருந்து உத்தராகண்டில் உள்ள ஹரித்வாருக்குச் சென்றுகொண்டிருந்த உத்கல் எக்ஸ்பிரஸ், கடந்த சனிக்கிழமையன்று தடம் புரண்டு 23 பேர் இறந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தினந்தோறும் பல லட்சம் பேர் பயணிக்கும் ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சிய நிர்வாகம் அதிர்ச்சி அளிக்கிறது.

உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டம் கத்தௌலி ரயில் நிலையத்துக்கு அருகில் சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரயில் சென்றதால் 14 பெட்டிகள் தடம் புரண்டன. பராமரிப்புப் பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் அந்த இடத்தில் இரண்டு நாட்களாக வேலை செய்துவந்துள்ளனர். அதைக் குறிக்க சிவப்புக் கொடிகளோ எச்சரிக்கைகளோ வைக்கப்படவில்லை. ரயில் பாதை பராமரிப்புப் பணி நடப்பதாகத் தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று கத்தௌலி ரயில் நிலையக் கண்காணிப்பாளர் ராஜீந்தர் சிங் தெரிவித்து உள்ளார். பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகள் நடந்தால் ரயில் கள் 20 கி.மீ. அல்லது 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். அதனால், ரயில்களின் பயண நேரம் கூடிவிடும், தங்களுடைய மண்டலத்துக்கு அவப்பெயராகிவிடும் என்று, பராமரிப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ரயில் இயக்கம் தொடர்பான பிற துறைகளுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை. அதற்குப் பதிலாக, இரு ரயில்களின் பயண இடைவேளையில் சிறு பராமரிப்புப் பணிகளைச் செய்கின்றனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கத்தௌலி ரயில் நிலையம், டெல்லிக்கு 100 கி.மீ. தொலைவில் இருந்தும்கூட மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பது இன்னும் கொடுமையானது. விபத்தில் சிக்கியவர்களை உள்ளூர் மக்களே பெட்டிகளிலிருந்து மீட்டு உணவு, தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். ஹரித்வாருக்குச் சென்ற பல யாத்ரீகர்கள், தங்களை மீட்டவர்களில் கணிசமானவர்கள் முஸ்லிம்கள் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

கடந்த 2016-17 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 99 விபத்துகள் நடந்தன. அதில் ரயில் பாதை பராமரிப்பு சரியில்லாததால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 40 என்று தெரிகிறது. ரயில் பாதையைத் திறம்படப் பராமரிக்க முடியா மல் இருப்பதற்கு முதல் காரணம், தகுதியான போதிய ஊழியர்கள் இல்லாததே. ஆள்குறைப்பு, பயிற்சி பெற்றவர்களை வேலைகளில் அமர்த்தாதது ஆகியவற்றாலேயே இந்தப் போதாமை நிலவுகிறது. ரயில்வே துறை மேம்பாடு தொடர்பாக, வாய்கிழியப் பேசிவரும் மோடி அரசு, பயணிகளின் உயிர் விஷயத்தில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்ற கேள்வி எழுகிறது. அரசின் அலட்சியத்துக்கு மனித உயிர்கள் பலியாவது மன்னிக்க முடியாதது.

SCROLL FOR NEXT