பா
கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செய்த ஊழல்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பத்திரிகை அம்பலப்படுத்தியது. அதை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியிலிருந்து அவரை நீக்கியிருக்கிறது. இப்போது பாகிஸ்தான் அரசியலில் வெற்றிடமும் நிலையற்ற தன்மையும் உருவாகிவிட்டன.
பதவிக்காலம் முடியும் முன்பே பிரதமர் பதவியை இழப்பது நவாஸ் ஷெரீப்புக்குப் புதிதல்ல. முதல் முறை, அதிகாரமிக்க ராணுவம் அவரைக் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்தது. இரண்டாவது முறையும் ராணுவம், ஆட்சியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றிக் கொண்டது. மூன்றாவது முறை, நீதிமன்றத் தீர்ப்பால் பதவி விலக நேர்ந்திருக்கிறது. அரசியல்வாதிகள் மாண்புக்குரியவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அரசியலமைப்புக் கூற்றினை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் செயல்படுத்தியிருக்கிறது.
நவாஸ் ஷெரீப் 2013-ம் ஆண்டு வேட்பு மனுவில், ஐக்கிய அரபு நாட்டின் நிறுவனம் ஒன்றுடன் தனக்கிருந்த தொடர்புகளைக் குறிப்பிடவில்லை. எனவே, அவர் பிரதமர் பதவி வகிப்பதற்குத் தகுதியானவர் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான பண மோசடிக் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்கள். இந்த வழக்கைத் தொடர்ந்த தேரிக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த இம்ராம் கான் இத்தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முடிவில் சட்டச் சிக்கல்களும் நடைமுறைக் கேள்விகளும் இருப்பது வருத்தத்துக்குரியது. ஒருவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னால், முழு விசாரணையையும் முடித்திருக்க வேண்டும்.
இப்பதவி நீக்கத்தால் தவிர்க்க முடியாத ஒரு கேள்வியும் எழுகிறது. நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதால், பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மை என்னவாகும்? நீண்ட கால அனுபவம் பெற்றதுடன் மக்களிடம் பிரபலமானவர். ராணுவ அதிகாரத்தைச் சமாளிக்கும் ஆற்றலையும் கடந்த கால அனுபவங்கள் அவருக்கு வழங்கியிருக்கிறது. பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்தபோதும்கூட நிர்வாகத் துறையில் ராணுவத்தின் தலையீடு தொடர்ந்தது.
கடந்த நான்காண்டு கால நவாஸ் ஷெரீப் ஆட்சியில்தான் அந்நாட்டின் பொருளாதார நிலை வலுப்பெற்றிருக்கிறது. மின் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன. பிரதமர் பதவியிலிருந்து ஷெரீப் விலக்கப்பட்டிருப்பதால் உருவாகும் அரசியல் நிலையற்ற தன்மையை அந்நாட்டு ராணுவம் எப்படிக் கையாளும் என்ற கேள்வி எழுகிறது. நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பஞ்சாப் மாநில முதலமைச்சருமான ஷாபாஸ் ஷெரீப் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்கா அளித்துவரும் அரசியல் அழுத்தங்களும் இந்தியா, ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பதற்றங்களும் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. நவாஸ் பின்னிருந்து இயக்கினாலும் ஏராளமான பிரச்சினைகளை ஷாபாஸ் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதே உண்மை.