தலையங்கம்

மகிழ்ச்சியில் பங்கேற்கிறோம்!

செய்திப்பிரிவு

இந்தியா மீது படிந்திருக்கும் சமூகக் களங்கங்களில் ஒன்றிலிருந்து நாட்டை விடுவிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களுக்கு அப்பாற்பட்டு, தங்களை மூன்றாம் பாலினமாக உணர்வோரின் வாழ்வுரிமையைச் சட்டரீதியாக அங்கீகரித்து, அவர்களுக்கு உரிய சலுகைகளையும் வழங்க வழிகாட்டி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மூன்றாம் பாலினத்தவரின் உணர்வுகளை நாம் எப்போதுமே மதிப்பதில்லை. நம் சமூகத்தைப் பொறுத்த அளவில் பொதுவில் அவர்கள் ஒரு கேலிப்பொருள். கிட்டத்தட்ட தீண்டத்தகாதவர்கள். பெற்ற தாய் - தந்தையில் தொடங்கி நண்பர்கள் உட்பட அனைவராலும் புறக்கணிக்கப்படும் அவர்கள் அடையும் அவமானம், வேதனை, எதிர்நோக்கும் இன்னல்கள் எதுபற்றியும் நாம் கவலை கொள்வதில்லை. ஒருபுறம் சமூகத்தின் மோசமான மனோபாவமும் விழிப்புணர்வின்மையும் இதற்குக் காரணம் என்றால், இன்னொருபுறம் சட்டரீதியாக அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததும் முக்கியமான காரணமாக இருந்தது. இந்நிலையில், “ஒருவர் இயற்கையில் ஆணா, பெண்ணா அல்லது மூன்றாவது பாலினமா என்று தீர்மானித்துக்கொள்வது அவரவர் வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான அம்சம்” என்று தீர்ப்பு அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் மூன்றாம் பாலினத்தவரின் சமூக விடுதலையை நோக்கிய பயணத்தில் மிகப் பெரிய படிக்கட்டுகள்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வெறும் தாளில் எழுதி வாசிக்கப்பட வேண்டிய வாசகம் அல்ல. அரசியல் சட்ட முகப்புரையிலும் சட்டத்திலும் அடிப்படை உரிமைகளிலும் வழிகாட்டு நெறிகளிலும் கூறப்பட்டுள்ள இந்த வாசகத்தை உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் பாரபட்சமின்றியும் நிறை வேற்ற வேண்டிய கடமை அரசுக்கும் சமூகத்துக்கும் இருக்கிறது” என்று கூறியிருக்கும் நீதிமன்றம், “எல்லா மருத்துவமனைகளிலும் மூன்றாவது பாலினருக்கு மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும், பொதுக் கழிப்பிடங்களில் மூன்றாவது பாலினத்தவருக்குத் தனிக் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும், மூன்றாம் பாலினம் என்ற அங்கீ காரத்துடன், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பதில் தொடங்கி, மூன்றாவது பாலினத்தவரின் பிரச்சினைகளை ஆராய்ந்து தக்க பரிகார நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். அந்தக் குழு தன்னுடைய அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அளிக்க வேண்டும், அந்தப் பரிந்துரைகள் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வேண்டும்” என்பது வரை அவர்கள் நல்வாழ்வுக்கான பல நல்ல உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

இந்த அங்கீகாரம் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வில் அற்புதமான மாற்றங்களை நிகழ்த்தும். “இது ஒரு பொன்னாள், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இங்கு அனைவருடைய உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன என்பதற்கு இந்தத் தீர்ப்பே சாட்சி” என்று மனம் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் பாராட்டியிருக்கின்றன பல திருநங்கைகள் அமைப்புகள். அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்கிறோம்!

SCROLL FOR NEXT