உ
த்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. (பாபா ராகவ் தாஸ்) மருத்துவக் கல்லூரியில் ஐந்து நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் பல்வேறு பிரச்சினைகளைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது. மிக முக்கியமாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் மருத்துவ வசதி மிக மோசமான நிலையில் இருப்பதை யும், கிராமப்புறத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் நகரங்களில் இருக்கும், ஓரளவு மருத்துவ வசதி கொண்ட மிகச் சில பெரிய மருத்துவமனைகளையே நாட வேண்டிய நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
குறைந்த கால இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் பி.ஆர்.டி. மருத்துவமனை மீது கவனம் குவிந்திருக்கிறது. கோரக்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. அதனால்தான், அப்பகுதிகளைச் சேர்ந்த மிக மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகள், கடைசி நம்பிக்கையாக பி.ஆர்.டி. மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளை நோக்கிவருகிறார்கள்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை, சுகாதார விஷயத்தில் நிலவும் இந்த மோசமான சூழலைப் பதிவுசெய்கிறது. ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த இயலாத நிலை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு, பழுதடைந்த மருத்துவ சாதனங்கள், மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது என்று பல பிரச்சினைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை, 50% ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர்கூட இல்லை என்பதும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நாட்டின் 13 மாநிலங்களில் மிக அதிகமான மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் அந்த அறிக்கையில் தெரியவந்திருக் கின்றன.
2020-ம் ஆண்டுக்கான சுகாதார இலக்குகளை மத்திய அரசு வகுத்திருக்கிறது. தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ், தற்போது 1,000-க்கு 40 எனும் அளவில் இருக்கும் குழந்தை கள் இறப்பு விகிதத்தை 30 ஆகக் குறைப்பது என்றெல்லாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் அரசின் நீடித்த அக்கறை, உரிய நிதி ஒதுக்கீடு, தொடர்ந்த கண்காணிப்பு போன்றவை தேவை. அத்துடன், ஒவ்வொரு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை கள் அவசியம். ஊரகப் பகுதி மக்களுக்கு மருத்துவர்களின் சேவை, மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வதை, தேசிய சுகாதாரத் திட்டத்தின் பிரதான நோக்கமாகக் கொள்ள வேண்டும்!