உ
த்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 7 முதல் 11 வரையிலான ஐந்து நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. இப்படியொரு அசம்பாவிதத்தைத் தடுக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தும் இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், அதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக நிர்வாக ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பாகவே, குழந்தைகளின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணம் அல்ல என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்துவந்த நிறுவனம், அந்த மருத்துவமனை நிர்வாகம் நீண்டகாலமாகத் தங்களுக்கான கட்டணத்தை வழங்கவில்லை என்று நோட்டீஸ் வழங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. குழந்தைகளின் உயிர் தொடர்பான முக்கிய விஷயம் என்று தெரிந்தும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தில், குறிப்பாக, உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் நோய் பாதிப்புகளும் அதன் விளைவாக உயிரிழப்புகளும் ஆண்டுதோறும் அதிகரித்திருக்கும் சூழலில், இவ்விஷயத்தில் மத்திய அரசும் உத்தர பிரதேச அரசும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது உறுதியாகிறது. பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளில் பலருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் இருந்திருக்கிறது. அம்மாநிலத்தில் 1978 முதல் 2005 வரை 10,000-க்கும் மேற்பட்டோர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்குப் பலியாகியிருக்கிறார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது தொகுதி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்திய தொற்றுநோய்கள் குறித்து நன்கு அறிந்தவர்தான். உத்தர பிரதேசத்தின் முந்தைய அரசுகள் இவ்விஷயத்தில் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனினும், குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு தற்போதைய முதல்வருக்குப் பொறுப்பு இல்லை என்று சொல்லித் தப்பித்துவிட முடியாது.
உயிரிழப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதியான மருத்துவ உட்கட்டமைப்பு தேவை. அரசு நிர்வாகங்களுக்கு மனம் இருந்தால் இதை மிக விரைவாகச் செய்து முடிக்க முடியும். சுகாதார விஷயத்தில் இப்படியான மோசமான நிலை இருப்பது குறித்து மத்திய அரசும் உத்தர பிரதேச அரசும் உடனடியாகப் பரிசீலனை செய்ய வேண்டும். நம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகள்கூட சுகாதார விஷயத்தில் நம்மை விட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. இந்நிலையில், வணிக நோக்கமற்ற வகையில், மருத்துவர்கள், பரிசோதனைகள், சிகிச்சைகள் போன்றவை அனைவருக்கும் சென்று சேரக்கூடிய சூழலை உருவாக்குவது மிக மிக முக்கியம்!