தலையங்கம்

ஐஎஸ் அமைப்பின் வீழ்ச்சி:இராக்கின் சாதனையும் சவால்களும்!

செய்திப்பிரிவு

ராக்கின் மோசூல் நகரில், ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிராண்ட் அல் - நூரி மசூதியைக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஐஎஸ் அமைப்புக்கு இராக் படைகள் கிட்டத்தட்ட முடிவுகட்டியிருக்கின்றன. ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் -பாக்தாதி, முஸ்லிம் அரசின் தலைவராக (காலிஃபேட்) என்று 2014-ல் தன்னை அறிவித்துக்கொண்டது இந்த மசூதியில்தான். தற்போது மோசூலின் சில பகுதிகளில் மட்டும் ஐஎஸ் படையினர் மிஞ்சி யிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் தங்கள் முழு வெற்றியை அறிவிக்கப்போவதாக இராக் தளபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் அமைப்பினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், இராக் படையினர் மோசூலை விட்டு வெளியேறியிருந்த நிலையில், இது அவர் களுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றிதான். மோசூலைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட இராக் பிரதமர் ஹைதர் அல் - அபாதி, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கையில் உறுதியாக இருந்தார்.

இராக் படைகள் ஒருபுறம் போரிட்டுக்கொண்டிருக்க, ஈரானிடம் பயிற்சிபெற்ற ஷியா படையினரும், குர்து இன பெஷ்மெர்கா படையினரும் அந்நடவடிக்கையில் இணைந்துகொண்டனர். மறுபுறம், ஐஎஸ் படையினர் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. அமெரிக்காவும் ஈரானும் பகை நாடுகள்; குர்து படையினருக்கும் ஈரான், இராக்குக்கும் நல்ல உறவில்லை எனும் சூழலில், ஐஎஸ் படையினரை எதிர்த்துப் போரிட அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தது நல்ல உதாரணம். பிற பகுதிகளில், குறிப்பாக இன்னமும் ஐஎஸ் ஆதிக்கம் நிலவிவரும் சிரியாவில் இதுபோன்ற அணுகுமுறை கைகொடுக்கும்.

மோசூல் நகரை மறுகட்டமைப்பது என்பது பிரதமர் அபாதிக்கு ஒரு பெரும் சவால்தான். கூடவே, ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் பலம்பெற்றுவிடாமல் தடுக்க வேண்டிய சவாலும் இருக்கிறது.

2006-ல் இராக்கில் அல்-கொய்தா தலைவர் அபு முஸாப் அல் -ஜர்காவி கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பினர் சிறிதுகாலம் பின்வாங்கியிருந்தாலும் மீண்டும் இராக்கின் அப்போதைய பிரதமர் நூரி அல் - மாலிகி தலைமையிலான ஷியா அரசின் குறுங்குழுவாதக் கொள்கைக்கு எதிராக சன்னி பிரிவினர் போரிடத் தொடங்கியது, சிரியாவில் ஏற்பட்ட நெருக்கடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அல்-கொய்தா படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.

அதேபோல், ஐஎஸ் படையினரும் மீண்டும் தலையெடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், நூரி அல்-மாலிகி செய்த தவறை, தானும் செய்யப்போவதில்லை எனும் நம்பிக்கையை இராக் மக்களிடம் பிரதமர் அபாதி ஏற்படுத்த வேண்டும். அதுதான் மிகப் பெரிய சவால்!

SCROLL FOR NEXT