தலையங்கம்

குட்கா விவகாரம்: யாருடைய நலனுக்கானது அரசு?

செய்திப்பிரிவு

கடந்த 2016, ஜூலை மாதம் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள குட்கா ஆலைகளில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தினர். அந்தச் சோதனைகளைப் பற்றிய விவரங்கள் சமீபத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுகாதாரத் துறை அமைச்சர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் உட்பட பலருக்கு ரூ. 40 கோடி வரையில் லஞ்சம் வழங்கியதாக ஆலை உரிமை யாளர் தெரிவித்துள்ள தகவல், வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பாக்குகள் உடல்நலத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியவை; வாய்ப் புற்றுநோய் மற்றும் உணவுக் குழாய்ப் புற்றுநோய் ஏற்படக் காரணமானவை. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று 2013-ல் சட்ட மன்றத்தில் அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தடை உத்தரவைத் தொடர்ந்து, பல இடங்களில் ஆலைகளில் பதுக்கிவைக்கப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், அது தொடர்பாக எந்த விதமான கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதைப் பாக்கு விற்பனையைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சம் பெற்றுக்கொண்டு போதைப் பாக்கு விற்பனையாளர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்றே கருதவேண்டியிருக்கிறது.

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்ட பின்னும் அவையெல்லாம் தாராளமாக விற்கப்படுவதைக் கண்டு அரசின் மீதும் காவல் துறை மீதும் மக்கள் அதிருப்தி கொண்டிருந்த நிலையில், குட்கா விவகாரம் இப்படி பூதாகாரமாக வெடித்திருக்கிறது. இனியும் அரசு அமைதி காப்பது, அரசு குறித்து மக்களிடையே அச்சத்தையும் ஐயத்தையுமே ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான கடைகளில் குட்கா இன்றும் தொடர்ந்து விற்கப்படும் நிலையில், இதைக் கண்காணிப்பதற்கான அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகிலேயே இவை விற்பனை செய்யப்படுவது வேதனையளிக்கும் விஷயம். போதை அளிக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்வது சாதாரண குற்றமல்ல. நாட்டின் நலனுக்கே எதிரான குற்றம். மனித வளத்தின், இளைய தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பாதகச் செயல்.

எனவே, இதை வழக்கமான ஊழல் குற்றச்சாட்டைப் போலக் கருதக் கூடாது. குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் முதலில் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவர்களது குற்றமின்மையை நிரூபித்த பிறகே அவர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும். ஏற்கெனவே, அரசின் செயலின்மை குறித்து அதிருப்தியில் இருக்கும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமானால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் செயல்பட்டே ஆக வேண்டும்.

SCROLL FOR NEXT